பக்கம்:நூறாசிரியம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

நூறாசிரியம்

65 குரக்கின் களிநடம்



காசிற் கில்லை; கந்தற் கில்லை;
மூசுநர் இளங்கை கொட்டி முழக்கி
அகடு வலிக்கும் உகுநகைக் கில்லை;
தகவுப் படுத்துந் தன்னைக் கோற்குத்
தாண்டியும் சுழன்றும் வேண்டிய ஆடுங் 5
காண்டகு குரக்கின் களிநடம் போல
என்னைக் கல்லா லன்னை
நன்னய வுரைக்கு மன்னாது நெஞ்சே!

பொழிப்பு :

காசுக்காகவும் இல்லை; கந்தல் துணிகளுக்காகவும் இல்லை (பார்க்கக்) கூடுவோர் இளைய கைகள் தட்டி வரவேற்று, மகிழ்ச்சியால் பேரொலி எழுப்பி வயிறு வலிக்க, உகுக்கின்ற நகை முழக்கத்திற்காகவும் இல்லை : தன்னை நெறிப்படுத்தி இயக்குகின்ற தன் தலைவனின் கையிலுள்ள கோலுக்கு இசைந்தே, அதைத் தாண்டவும் சுழலவும் அவன் விரும்பிய வகையில் எல்லாம் ஆடுகின்ற, காணத்தகுந்த குரங்கின் களிப்பான நடனத்தைப் போல, என் தலைவனுக்கு அல்லாமல் அன்னையினது அன்பான மெல்லுரைகளுக்குப் பொருந்துவதில்லை என் நெஞ்சம்.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவன் மீது ஆராக் காதல் கொண்ட தலைவி தன்காதலைத் தன் நெருங்கிய தோழிக்குக் குறிப்பாக உணர்த்தியதாகும் இப்பாடல்.

தெருவில் நடந்த குரங்காட்டத்தைத் தன் இல்லத்தினின்று கண்டு களித்த தலைவி, அருகிருந்த தோழியிடம், அக்குரங்கைக் காட்டி, அது போல்வதே ஆகும் தன் நிலையும் என்று கூறித் தன் தலைவனிடம் தனக்கு இருக்கும் ஈடுபாட்டைப் புலப்படுத்திக் கூறினாள் என்க.

ஈண்டு இத் தெருவிலாடும் இக்குரங்கு, காசுக்காகவும் ஆடவில்லை, வேடிக்கை பார்க்கின்றவர்கள் கொடுக்கும் கந்தல் துணிகளுக்காகவும் ஆடவில்லை. அல்லது அங்குக் கூடியுள்ள சிறுவர்கள் குரங்கின் வேடிக்கைகளைப் பார்த்துக் கைகளைத் தட்டி மகிழ்ந்து ஆரவாரம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/318&oldid=1209168" இலிருந்து மீள்விக்கப்பட்டது