பக்கம்:நூறாசிரியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

185

39 உயிர்கொல் நெஞ்சம்

வடுவின் றெடுத்த மார்பி னோனே
நெடுவின் றிமிலிய தோளி னோனே
குழலென் கரிந்த குஞ்சியும் பரந்த
ஒளிவார் நெற்றியும் வளிவார்ந் தெழுந்த
கொழுவின் கூரிய மூக்குமன் னோனே 5
அருளுமிழ் கண்ணோ டணைந்தடி வடிந்த
கரிமயிர் தடவிய விரிசெவி யோனே
அரியிதழ் வாயின் அடுக்கிய நகையும்
மலையிழித் திறங்கிய கலைபுண ரருவி
அலையெனப் புடைத்த அருட்கையு மாகி 10
மயர்வறப் பொலிந்த மல்லல் மேனியோற்
குயிர்கொல் நெஞ்சம் எவன்குடி கொண்டதே!

பொழிப்பு:

குற்றமில்லாமல் உயர்ந்து விளங்கும் மார்பினன்; நீண்டு புடைத் தெழுந்த தோளினன்; குழல்போலும் சுருண்ட தலைமயிரும், அகன்று, ஒளி ஒழுகும் நெற்றியும், ஒழுங்குபட்ட உயிர்ப்பை உடையதால், எடுத்து நின்ற, கொழுமுனையைப் போலும் கூர்மையுடைய மூக்கும் வாய்க்கப்பெற்றவன் ; வேற்றுமையற்று அன்பைப் பொழிகின்ற கண்களை அணைந்து, அடிநோக்கி அழகுற அமைந்ததும், குறுஞ் சுருள் மயிர் தடவிக் கொண்டுள்ளதுமாகிய விரிந்த செவியினன்; பருக்கைக் கல்போலும் இதழ்களையுடைய வாயில் வரிசையுற அமைந்த பற்களும்; மலையினின்று தவழ்ந்து விழும் கலையுணர்வைத் தோற்றுவிக்கும் அருவியின் அலைகள் போலும் புடைத்து நின்ற அருள் தோய்ந்த கைகளும் உடையவனாகி, மாறுபாடு அற்ற வகையில் அழகுற விளங்கும் வளப்பம் மிகுந்த மேனியோன் இவனுக்கு என் உயிரைக் கொல்லுகின்ற நெஞ்சம் மட்டும் எங்ஙனம் கூடி கொண்டதோ!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/211&oldid=1208948" இலிருந்து மீள்விக்கப்பட்டது