பக்கம்:நூறாசிரியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40 குடுமித் தேங்காய்

குடிமித் தேங்காய் துருவிப் பிழிந்த
கடும்பால் சுவையின் நலந்தரு தீம்பால்
முதிர முதிர முகங்கெடப் புளிக்குந்
துதைசொற் பூரியர் தோன்றா நட்பிற்
கஞ்சுவல் யாமே நெஞ்சுதளை யவிழ்ந்து 5
மஞ்சமை குன்றத்து மலர்வாய் குடைந்து
துமி துமி ஈண்டிய மூரித் தேறல்
தமிழ்பெறக் கெழீஇய தகையோர் தொடர்போல்
முற்ற முற்றச் சுவைமூ வாதே!
ஆகலின், 10
உணர்வின் தூவிய லுரவோர்க்கு
இணைவுற நடநீ நெஞ்சுபல் யாண்டே!

பொழிப்பு:

மட்டையுரித்துக் குடுமியிட்டுலர்ந்த தேங்காயைப் பூத்துருவிப் பிழியக் கிடைத்ததும், கன்றின்ற ஆவின் சீம்பாலினும் சுவையும் நலமும் தருவதும் ஆகிய இனிய தேங்காய்ப் பால், பொழுது கழியக் கழிய, முகம் நெருங்கி மோத்தற்கும் இயையாவாறு புளிப்பு மிகும் தன்மையின், நெருங்கி நின்று சுவை துளும்பிய சொல்லாடி மகிழ்வூட்டியிருந்து, காலஞ்செல்லச் செல்ல, முகமும் எதிர்ப்பட விரும்பாத நிலையில் மனம் புளித்துப் போகின்ற கீழ்மை யுணர்வு நிரம்பியவர்களின் தோன்றக் கூடாத நட்பிற்கு யாம் அஞ்சுகின்றோம். குளிர்ந்த நீர்த்துளி நிரம்பிய மெல்லிய வெண்மேகம் வந்து அமைகின்ற குன்றத்தில் பூத்துக் கிடக்கும் மலர்களின் வாய்களைக் குடைந்து, துளி துளியாகத் திரட்டிய செந்நிறம் பாய்ந்த தேன், இனிமை சேரும்படி நெஞ்சின் கட்டுகளையவிழ்த்துக் கொண்டு, உரிமை பாராட்டிப் பழகும் மேற்பாடுற்றவர் தொடர்புபோல், நாட்செல்லச் செல்ல மேலும் மேலும் சுவை மிகுமேயல்லது திரிந்து வேறுபடாது ஆகலின், உள்ளத்தின் அளவாக வெளிப்படும் உணர்வினது தூய்மை இயல்புடைய அறிவு நலஞ்சான்றவர்க்குப் பொருந்திய தொடர்பாளனாகும்படி ஏ! நெஞ்சே! நீ பல ஆண்டுகளாயினும், நெடுந்தொலைவாயினும் நடந்து அங்காந்து தேடிச் செல்வாயாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/215&oldid=1208982" இலிருந்து மீள்விக்கப்பட்டது