பக்கம்:நூறாசிரியம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

383


92 இனிய நன்னாளே!


நெடுந்தொலை விலையே, கடுவணி மைத்தே;
 உடுநீ ராடையில் வுலகம் ஒன்றெனப்
பனிக்கல் மிதவைப் பாடகழ்ந் துண்ணும்
நனிக்குற ளொருவனும், நடுமணற் பரவை
நீந்தக லடியுயர் நெடுங்கழுத் தொட்டை 5
ஏந்துபு புறமுடைத் தின்புன லருத்தும்
பாலை வாணனும், பனிமலை வதியனும்,
நீலலைக் குமரி நெடுங்கரை முகிழ்த்த
முதுகுடித் தமிழனும், மொய்நீர் வேலிப்
புதுத்தி வுயிர்க்கும் புன்குர லொருவனும், 10
அறிவறி யாவிருள் அடர்மரக் கான்மிசை
குறிகட வாவெய் கூர்வே லுயிருண
வீழ்மட மாந்தர் வெந்நீ ருறிஞ்சிச்
சூழ்ந்துட லுண்ணும் பாழினத் தொருவனும்
தம்பிறப் பிறந்தே தமக்குள் 15
எம்பிறப் பென்னு மினியநன் னாளே!

பொழிப்பு:

‘உடுத்துள்ள நீராகிய ஆடை தழுவிய இவ்வுலகத்துவாழ் மக்களெல்லாம் ஒன்று எனுங்கொள்கையராகி, உட்புறத்துக் காண்டலாகிய உணவுச் செல்வங்களுக்காக மிதக்கின்ற பனிக்கட்டியை உடைத்து, உண்டுவாழும் பண்பினராகிய, மிகவும் குட்டையான மாந்தர்இனத்தானும்: மணற்கடலாகிய பாலைப் பரப்பின் நடுப்புறத்தே, நீந்திக் கடக்கும் அகன்ற அடிகளையும், உயர்ந்த நெடுமையான கழுத்தையும் உடையதான ஒட்டகத்தின், எடுத்து நின்ற புறமுதுகின் குமிழை உடைத்து, அதனுள் காக்கப்பட்ட இனிமையான நீரை அருந்தும் பண்பினராகிய பாலை நாட்டார் இனத்தானும், பனிதோய்ந்து கிடக்கும் மலைகளில் வாழும் இனத்தானும், நீல அலை தவழும் குமரி முனையின் நெடுமையான கடற்கரையில் வதியும் தொல்குடித் தமிழனும் சுற்றிலுஞ் சூழ்ந்த நீரே வேலியாகி நிற்க, நடுவில் எழுந்த புதுமையான தீவின்கண் தோன்றிய அடங்கிய குரலையுடைய எளிய மாந்தர் இனத்தானும் அறிவாலும் அறியப்படாமல் இருள்மண்டி அடர்ந்திருக்கின்ற மரங்கள் நிறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/409&oldid=1211232" இலிருந்து மீள்விக்கப்பட்டது