பக்கம்:நூறாசிரியம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

367


87 தகவிலார் நோன்பு


நூலோர் அழுந்திய உயர்வழிப் பொருந்தி
மேலோர் தாமென் றுட்பெற வுட்கி
முனிவுங் காய்வும் மூளா நேர்மையும்
இனியவர்க் கன்பும் இன்னார்க் கருளும்
ஓர்ங்கால் மனமும் மெய்யும் ஒடுங்கிக் 5
கூர்ந்தவ வொழுக்கி னேர்தலை நோற்புங்
கொண்டோ ராகி ஊண்டுயில் மறந்து
மண்டிய கல்வி மருவிலர்க் கீந்த
தீமையில் அறமும் பொருளும் இன்பமும்
ஓங்கிய புகழின் உயர்த்தோ 10
தாங்கிய செல்வத் தகவிலார் நோன்யே!

பொழிப்பு:

விழுமிய நூல்களைப் பயின்றுணர்ந்த அறிஞர் பெருமக்கள் கடைப்பிடித்த உயரிய வாழ்க்கை நெறியைப் பொருந்தி, மேலோர் என்று தம்மையும் உட்படுத்திக் கொள்ளுதற்கு அஞ்சி, சினமும் வெறுப்பும் தோன்றாத செம்மையும். தமக்கு இனியரான தம்மைச் சார்ந்தாருக்கு அன்பும், மாறான பகைவர்கட்கு அருளும், ஆராய்ந்து பார்க்குமிடத்து உள்ளமும் உடலும் ஒடுங்கப் பெற்றுச் சிறந்த தவவொழுக்கத்திற்கு நேரிய மிக்கப் பொறுமையும் கொண்டவராகி, உண்டியும் உறக்கமுங் கொள்ளாது தம்மிடத்து நிறைத்த கல்வியைப் பகைவர்க்குக்குங் கற்பித்த குற்றமற்ற அறமும் பொருளும் இன்பமும் சிறந்த புகழைவிட மேலானதோ செல்வத்தை சுமந்திருக்கும், தகுதியில்லாதவர்கள் நோற்கும் நோன்பின் பயன்?

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது. செல்வப் பெருக்கமுடைய, தகுதியற்றவர் சிலர் நோன்பு என்னும் பெயரில் ஆரவாரித்தல் கண்டு, சான்றாண்மையுடையார் தொண்டு வாழ்க்கையாற் பெறும் புகழைவிட அத் தகுதியிலாச் செல்வர்கள் கடைப் பிடிக்கும் நோன்பின் பயன் உயர்ந்ததாகாது என்று எடுத்துரைப்பது இப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/393&oldid=1209683" இலிருந்து மீள்விக்கப்பட்டது