பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழாக் காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப்பெற்றது. இச்செய்தி,

'ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபம் பாங்கறிந் தேறுமின்'

எனவரும் மணிமேகலைத் தொடரால் இனிது புலனாகின் றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புக்களும், மத மாறுபாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமை யுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோடொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின.

அசோக வேந்தன் காலந் தொடங்கிக் கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் எறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்திற் குடியேறி, இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத்துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் தமிழ் வேந்தரது அரசு நிலைகுலையத் தொடங்கிய நிலையில் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்து வந்த அயலவராகிய கருநட மன்னர் முதலியோரது துணைகொண்டு தம் சமயக் கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும் பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இணங்காத தமிழ் மக்களையெல்லாம் தம் மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தவறான தந்திரங்களை யெல்லாம் கையாள்வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமண புத்த சமயத்தார்க்குமிடையே வழக்குகளும், எதிர்வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் மதக் கொள்கையினையுடையார் பிறிதொரு மதக்