பக்கம்:நூறாசிரியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

நூறாசிரியம்

தேங்குகின்றது. அதனை அவ்வாறே தேக்கி வைத்திருப்பின், அது மீண்டும் ஏதோ ஒரு போகும் வழியில் போய்விடும். அந்நிலையில் அது பயன் ஒன்றும் பயவாது, அழிவையும் உண்டாக்கிவிடும். அதனை முன்னுணர்ந்து கொண்டு, அதனைப் பயனுடைய வழிகளுக்குச் செலவிட வேண்டும்; அதுவே அறமும் உலகப் பயன் கருதியதும் ஆகும் என்பது இப்பாட்டு,

வற்றக் காய்ந்த- அடிநீரும் வற்றிப் போகும்படி வெயிலிற் காய்ந்த

வறல் களிப் பிளவை : வறண்டு வெடித்த களிமண் பிளவுகள்.

துற்ற:பொருந்தி ஒன்றோடு ஒன்று இணையும்படி

பொழிதர: மழையானது நன்கு பொழிய,

துளும்பு நீர் ஏரிக் கொடுங்கரை : நிறைந்து துளும்புகின்ற நீரையுடைய ஏரியினது வளைந்த கரை,

இரிந்து : இடிந்து விழுந்து

ஊர்குலைவுறு முன்னம்: அண்டை அயல் ஊர்கள் நிலைகுலையும் முன்.

பாய்கால் எற்று : அந்நிரம்பிய நீர் பாய்ந்து ஓடித் தேவையான சேய்மை நிலத்திற்குப் பயன்படும்படி வாய்க்கால்களை எடுத்து ;

பயன் கொளும் பான்மையின்: அந்நீரின் பயனை முழுதாகக் கொள்ளும் தன்மை போல்.

ஆய்வழித் தேங்கிய ஆக்கம் : ஏதோ ஓர் ஆகின்ற வழியில் வந்து தேங்கிய செல்வம் முதலிய ஆக்கங்கள்.

சாய்வழிச் சாய்முன் : ஏதோ ஒரு வழியில் முழுதும் வீழ்ந்துபோகு முன்.

காய்த்தலும் நன்றே : நாமே, அச்செல்வம் நல்ல வழிக்குப் பயன்படும்படி ஈடுபடுத்துவதும் நல்லறமாகும்.

வற்றக் காய்ந்த நிலம் என்றதால் முன் வறுமையுற்ற நிலை உணர்த்தப்பெற்றது.

வறற்களிப் பிளவை என்றதால் வறுமையால் தாக்குண்டவர். தம்முன் பூசலிட்டு உறவும் உற்றமும் வேறுபடப் பிரிந்து நின்ற நிலை கூறப்பெற்றது. துற்றப் பொழி தர என்றதால், செல்வம் வந்த விடத்து அப்பிளவுகள் நீங்கி ஒருமையுறும் இயற்கைத் தன்மை காட்டப்பெற்றது. துளும்புதல், நீர் அளவு மீறலால், தன் இயங்கு நிலை அழுத்தம் மிகுந்து அசைவுற்றுக் கரை மீற முற்படுதல்.

கொடுங் கரை: வளைந்த கரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/225&oldid=1209021" இலிருந்து மீள்விக்கப்பட்டது