பக்கம்:நூறாசிரியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நூறாசிரியம்

கண் தோன்றி விளங்கும் அணுத் திரளையாகிய மாந்தனும், அவனின்று வெளிப்படும் உணர்வுகளும், அவை யுணர்த்தும் ஒலிகளும் அவையடங்கிய சொற்களும், அவை நிரம்பிய மொழிகளும் இவ்வுலக உண்மைகளைப் பல்வகையானும் பறை சாற்றி நிற்கும் பிண்டப் பொருள்களே ஆகலின், இவை வழியாகவும் இவ்வண்ட உண்மைகள் உணரப் பெறுதல் கூடும் என்று அறிக. இனி, முதுமொழியாம் நம் முத்தமிழ் மொழியோ மாந்தன் கலப்புறா உணர்வினனாகிக் காடுமேடுகளில் சுற்றியலையும் காட்டு மிராண்டியாக, எவ்வகைத் தன் முயற்சியும். இன்றி, இப்பேரியற்கையின் உணர்வலைக்குள் ஒடுங்கி நின்ற காலத்தே தோன்றிய மொழியாதலின், இம் மொழி ஒன்றின் கண்ணேயே இவ்வியற்கையின் உண்மைகள் நிரப்பப் பெற்றிருத்தலையும், இஃதன்றிப் பிறவெல்லா மொழிகளும் மாந்தன் தன்னுணர்வு மிகப் பெற்று உணர்வு வெளிப்பாட்டுத் திறம் பெற்ற கலப்புணர்வுக் காலத்தே தோற்றுவிக்கப் பெற்றவாகலின், அவற்றுள் கால நிரலாகவும், கருத்து நிரலாகவும் இயற்கையல்லாப் படைத்து மொழிதலாகிய சொற்கள் நிரப்பப் பெற்றிருத்தலையும் மெய்யறிவினால் கண்டு கொள்க. படைத்து மொழிதலாவது, அரிசியைச் சோறாக்கல், மாவாக்கல், கூழாக்கல், அவித்துப் பிட்டாக்கல் போன்ற இயற்கைமேல் மாந்தன் தன்னுணர்வால் அமைத்துக் கொண்ட செயற்கை வினைப்பாடுகள் போல், இயற்கை மூல உணர்வொலிகளைக் கூட்டியும் குறைத்தும், நெளித்தும் சுழித்தும், நலித்தும் படைத்துக் கொண்ட சொற்களும் அவற்றைக் கூட்டுற மொழிதலுமாகும்.

எனவேதாம் நம் முதுமொழித் தமிழ்ச் சொற்கள் மெய்யறிவு பூட்டப் பெற்ற இயற்கைப் பெட்டகங்களாக உள்ள நிலையைத் தெற்றெனத் தெளிந்து தேர்க.

இனி, பிற வெளிப்பாட்டு நிலைகளினின்று வெளியேறி வரும் வலிந்த நினைவலைகளே நமக்கு வித்தாக அமைந்து நாளடைவில் முளை விட்டு அறிவாக வளருமென்று கொள்க. இனி, அவ்வறிவு பகுத்தறிவாயும், அதன் பின் மெய்யறிவாயும் மலருமென்க. இம்மூவகையறிவும் வளர்தலுக்குற்ற நிலன் இந்நெஞ்சே என்பது இப்பாட்டின் முதலடியால் விளக்கப் பெற்றது.

ஐம்புலன் - ஐந்து புலன் உணர்வுகள். புல-புலர்-புலர்தல்-புலத்தல் வெளிப்படுதல் புலம்-புறம்-புறப்படுதல்-புறத்தே தோன்றுதல்- வெளிப்படுதல் உடலின்கண்பொதியப் பெற்ற ஐம்பூத நிலைகளுக்கும் அடிப்படையாகிய உணர்வுகள் வெளிப்பட்டு நிற்றல். புல்-பொல்-பொள்-பொறி. கதிர்மணிகளை வறுத்துச் சூடேற்றுங்கால் அவை பொரிந்து மலர்தலுக்கும் மூலம்'பொல்' என்னும் சொல்லே யாகும். புல்-பொல்-பொரி-பொரிதல்-உள்ளீடு- வெளிப்படல்.

ஐம்புலன்கள் ஆகிய கொழுமுனைகளைக் கொண்ட அறிவாகிய பகடு-ஏர் என்பதாம். ஈண்டு அறிவு ஏராகவும், அவ்வேர் முனைகளாக ஐம்புலனுணர்வுகளும் உருவகிக்கப் பெற்றன. அறிவு முயற்சி ஏரின் உழுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/102&oldid=1221518" இலிருந்து மீள்விக்கப்பட்டது