தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்

விக்கிமூலம் இலிருந்து

2. தொந்தி ஏன் என சிந்தியுங்கள்

தொப்பை வந்தது எப்படி?

உடலில் பல பைகள் இருக்கின்றன.

காற்றை நிரப்பி வைப்பதால் காற்றுப்பை, சோற்றை நிரப்பிக்கொள்வதால் சோற்றுப் பை, உடலைக் காக்க சுரக்கும் நீர்கள் பகுதியோ ஊற்றுப்பை.

உடலில் எலும்புப் பகுதியே இல்லாத ஒரு உறுப்பு வயிறு என்பதாகும். மிகவும் முக்கியமான உறுப்புக்களை எல்லாம் உள்ளே அடக்கி வைத்துக் காக்கின்ற பெரும் பொறுப்பு வயிற்றுக்கு உண்டு.

எலும்புகள் கூடாக இருந்து உள் உறுப்புக்களைக் காப்பது போல, வயிறு மிக உறுதியாக இருந்து உள்ளே உள்ள உறுப்புக்கள் இடம் பெயராமலும், தொல்லை இல்லாமல் தங்கள் பணிகளைத் தொட வைப்பதிலும் வயிற்றுக்குப் பெரும் பங்கு உண்டு.

அப்படி வலிமையோடு, உடலோடு ஒட்டி இருந்தால், அதற்குப் பெயர் வயிறு. அளவுக்கு அதிகமாக வயிறு விரிந்து விடுகிறபோது அதற்குத் தொப்பை என்று பெயர்.

தொப்பை என்று ஏன் பெயர் வந்தது? ஒரு சாண் வயிறு என்று அளவிட்டுக் கூறுவார்கள். அதுவே விரிந்து ஒரு முழம் ஆகிறது. அதற்கு மேலும் பக்கவாட்டில் இடம் பிடித்து, ஆக்கிரமித்தபடி முதுகு பக்கமும் போய் முகம் காட்டிக் கொள்கிறது.

இப்படி பரப்பிக் கொண்டும், துருத்திக் கொண்டும் இருப்பதைத்தானே தொப்பை என்றனர்.

உடல் முழுவதையும் மெய்ப்பை என்பார்கள்.

வயிற்றையோ தோல்பை என்பார்கள். ஏனென்றால் அத்தனைப் பைகளுக்கும் அடிப்படையாக இருப்பதால்.

ஒட்டி இருக்கிறவரை அதற்கு தோல்பை என்று பெயர். விரிந்தால், அதன்பெயர் தொப்பை. தொல் என்றால் பழைய என்பது ஓர் அர்த்தம். சோர்வுற்ற என்பதும் ஓர் அர்த்தம்.

இறுக்கமாக இருக்க வேண்டிய வயிறு என்ற தோல்பையானது, இறுக்கம் குறைந்து. சோர்வடைந்து. தொள தொள வென்று சரிந்து போவதால், தொப்பை ஆயிற்று. தோல் பை தான் பேச்சு வழக்கில் தொற்பை ஆகி பிறகு, தொப்பை ஆயிற்று.

நடக்கும் போதும், ஓடும்போதும், தொப்பையானது குலுங்குவதாலும், தட்டினால் தொம் தொம் என்று சத்தம் கொடுப்பதாலும், அது தொந்தி என்ற ஒரு செல்லப் பெயரை பெற்றுக் கொண்டது.

முதலில் முகம் காட்டுகிற தொந்திக்கு பணக்காரத் தொந்தி, கொஞ்சம் புசுபுசு வென்று வளர்ந்து வருவது பஞ்சு தொந்தி. இனிமேல் இதைக் கரைக்கவோ குறைக்கவோ முடியாது என்பதற்கு இரும்புத் தொந்தி!

உங்கள் நிலை எப்படி? எண்ணிப் பார்த்து வாழ்வது உடம்புக்கும் புண்ணியமல்லவா!

வாழ்வுக்கும் கண்ணியமல்லவா!

துன்பமும் சங்கடமும்

எண்ணுதற்கே இயலாத அளவுக்கு இன்னலை இட்டு நிரப்பி, இன்னும் இன்னும் என்று பல வலிகளைக் கூட்டி வருவதில் மிகவும் வல்லமை பெற்றது - வளர்கின்ற தொந்தியாகும். வந்து விட்ட தொந்தியாகும்.

வயிற்றுத் தசைகளின் அழுத்தத்தில், அதனால் விளையும் பரிபூரண பாதுகாப்பில், பத்திரமாகத் தங்கள் இடத்திலிருந்து பணியாற்றிய உள்ளுறுப்புக்கள் அனைத்தும் தங்கள் உற்சாகமான பணியிலிருந்து மாறுபடுவதுடன், இடத்தின் அளவிலும் விலகி நகர்ந்து, வேறுபடத் தொடங்குகின்றன.

உறுப்புக்களின் இடமாற்றத்தாலும் , தடுமாற்றத்தாலும் உறுப்புக்களுக்கு ஒரு வித வலியும் இனம் புரியாத ஒருவித நெருக்கடியும் ஏற்பட ஏதுவாகின்றன.

சீரணிக்கும் செயலில், வேகமும் விறுவிறுப்பும் குறையத் தொடங்குகிறது. ஒழுங்குபட இருந்த உள்ஜீரண உறுப்புக்கள் பரந்துபட விரிந்து கொள்வதால், உடல் சமநிலை மாறிப்போய் விடுகின்றது. அவ்வப்பொழுது பசியும் தாகமும் ஏற்படும் என்றாலும் சீரணம் சரிவர நேரத்திற்கு நடைபெறாமல் போய்விடுகிறது.

உணவு உண்டபின், உணவுப் பையை விட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதாவது மூன்று மணிக்குள்ளாக குடற் பகுதிகளுக்கு மாற்றம் பெற்ற உணவுகள் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.

அப்படிப் போகாமல் உணவு அதிக நேரம் அந்த உணவுப் பைக்குள் தங்குவதால் பலவித பணிகள் பங்கமடைகின்றன. பாதகமடைகின்றன. பாழ்பட்டுப் போகின்றன.

அதிக நேரம் ஆக ஆக, பசியின்மை ஏற்படும். அதனால் பசித்துப் புசி என்ற பழமொழி இருந்தாலும், நாகரிகக் காலமானதால் , அந்தப் பழ மொழி அலட்சியப்படுத்தப் படுவதால், அடுத்தடுத்து விழுகின்ற உணவைத் தாங்க முடியாத இரைப்பை உயர்ந்து தளர்வதால், அஜீரணம் உண்டாகிறது.

அஜீரணத்தின் அடுத்தக் கட்டம் ‘மலச்சிக்கல்’ மலத்தில் சிக்கல் என்றால் பலத்தில், வளத்தில், மனத்தில், தரத்தில் எல்லாமே சிக்கல்தான். சிணுங்கல் தான்.

இந்தச் சிக்கலைச் செழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது மூல நோயாகும். ஆமாம். மலச்சிக்கல் வந்து விட்டது என்றால் உள் மூலம், வெளி மூலம் என்ற நோய்கள் (மலம் வெளியேறும் பகுதி) எருவாயைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளுகின்றன. பாடாய்ப் படுத்திவிடுகின்றன.

காலம் தெரியாமல் எருவாயைக் கடுக்கின்ற மூல நோயைத் தொடர்ந்து, குடள் பிதுக்க நோய் எனும் ஹெரண்யா வியாதியும் வரும்.

வயிற்றின் அளவு விரிய விரிய, உள்ளே கொழுப்பு பெருகப் பெருக, வேண்டாத சுமையும் கனமும் வயிற்றுப் பரப்பிலே விளைகின்றது. அதனால் இடுப்பு எலும்புகளுக்குக் கோர் புதிய கனம் புகுந்து கொள்கிறது. வலிமிகுந்து கொள்கிறது.

சாதாரணமாக, மனிதன் நிற்கும் பொழுது சமநிலை சக்தியைக் தருகின்ற புவியீர்ப்புத்தானமானது, விரித்து நிற்கும் இரண்டு கால்களுக்கு மத்தியிலே வந்து விழும். அப்படித்தான் விழ வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் நிமிர்ந்து நேராக நிற்க முடியும். உடலும் உண்மையிலே ஒழுங்காக இருக்கிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.

கூடு கட்டிய நெஞ்சால், முதுகு வளைந்து கொள்ளும் பொழுது, உடல் முன் கவிழ்ந்து இருக்க, புவியீர்ப்புத் தானம் முன்பாதத்திற்கு முன்னால் விழ, அதனால் நடையிலே நடைமாற்றம் ஏற்படும். தடுமாற்றமும் ஏற்படும்.

தொந்தி அளவிலும் உருவிலும் கனத்திலும் அதிகமாகி விட்டால் முன்புறமாகப் பெருத்த அமைப்பால், முதுகு பின்புறமாக வளைந்து கொள்ளத் தொடங்குகிறது. கவிழ்ந்து கொண்டு கலங்குகிறது.

பாரம் தாங்காத மரக்கிளை வளைவது போல, பின்புறமாக உடல் வளையும் பொழுது, புவியீர்ப்புத் தானமானது குதிகால்களுக்குப் பின்னால் தான் போய் விழ வேண்டிய சூழ்நிலை அமைகிறது.

இதனால் கனம் சுமக்கின்ற காரணத்தாலும், பின்புறம் வளைவினாலும் இனந்தெரியாத வலியினை முதுகெலும்பு நாளா வட்டத்தில் பெறுகின்றது. அது பிற்காலத்தில் பெருகிக் கொண்டே போய். உடலில் நலிவு ஏற்படும் பொழுதெல்லாம், இந்த வலி வலியதாகி வருத்தத் தொடங்கிவிடும். உறுத்தவும் தொடங்கிவிடும்.

இவ்வாறு முதுகு வலியும் முதுகெலும்பின் உள்வளைவால்விளையும் உள் வேதனையும், வயிற்றுச் சுமையால் இடுப்பெலும்பு வலியும், என்று எல்லா வலிகளும் ஏற்பட ஏற்பட, வாழ்க்கை நிலையில் ஆயாசமே மிகுதியாகின்றது. அவலமே நிறைந்து கொள்கிறது. ஆனந்தமும் மறைந்து கொள்கிறது.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் வேகமாக நடக்கவும் ஒடவும் போன்ற சூழ்நிலைகள் தான் அதிகம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். என்ன செய்வார்கள். என்ன செய்யமுடியும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். மிகவும் வேடிக்கையான காட்சிதான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு அவர்கள் நடந்து போகும் பொழுது, பாம்பு சீறுவது போலக்கூட அவர்கள் விடும் பெருமூச்சு கேட்கலாம். அந்தப்பெருமூச்சு இதயத்தின் ஏக்க ஒலி என்றால் நம்பக்கூடியதா என்றால் ஆமாம் என்பதே அதற்குப் பதிலாகும்.

பெருமூச்சு ஏன்?

வேண்டாத சுமைக்கும், விரும்பாத கொழுப்புப் பகுதிகளுக்கும் இரத்தத்தை இறைக்கின்ற கூடுதல் பொறுப்பை இதயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதிக வேகமாகத் தன்னை அழுத்தி, இரத்தத்தை இறைக்கும் இதயத்திற்கும். அதனால் ஏற்பட வேண்டிய விரைவுக்கும் உதவக்கூடிய உயிர்க்காற்று - பிராண வாயு அதிகம் வேண்டுமே!

அத்தகைய உயிர்க்காற்று இல்லாவிடில், கரியமில வாயு, லேக்டிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் எல்லாம் உடல் இயக்கத்தால் உடலுக்குள் அதிகம் சேர்ந்து விடுமே!

கழிவுப் பொருட்களால் தான் உடல் சோவடைகிறது. அந்த ஆயாசத்தையும் களைப்பையும் போக்கத்தான் உள் மூச்சும் வெளிமூச்சும் இணைந்து பெருமூச்சாகப் பெருகி வருகின்றது.

மெலிந்த வயிற் றுத் தசைகளை மேலும் மெலிந்ததாக்கி, சீரணிக்கும் உறுப்புக் களை செயல்படவிடாமல் பாதித்து, இரத்தக் கொதிப்பை இஷ்டம் போல் உண்டுபண்ணி, மலச்சிக்கலை மனமார ஏற்படுத்தி ‘மசமச’ வென்றிருக்கும் ஒரு மந்த நிலையில் வாழச் செய்கிறது. செயல்களில் சுறுசுறுப் பில்லாமல் மதமதத்துப் போகச் செய்வதுடன் அனாவசியமான கொழுப்பை அடிவயிற்றில் சுமந்து கொண்டு திரிபவரைப் பார்த்து அந்த இதயம் ஏன் பெருமூச்சு விடாது?

இந்தத் தொந்தியானது எந்த விதத்திலும், எந்தப் பருவத்திலும் யாருக்கும் எப்பொழுதும் ஏற்றதே அல்ல என்பது, எல்லோருடைய ஏகோபித்த அபிப்ராயமாகும். முடிவும் ஆகும். உண்மைதானே!

உடையும் நடையும்

உடலின் தரமும் திறமும் தான் இந்தத் தொந்தியால் விடை பெற்றுக்கொண்டு போகிறது என்றால், உடலுக்கு அழகு ஊட்டும் உடையைப் பற்றி என்ன சொல்ல?

போட்டுக் கொள்கின்ற முழுகால் சட்டை இடுப்புக்குப் பொருந் தாமல் , அடிவயிற்றின் அடித் தளத்திலே ஆதாரமில்லாமல், அனாதையாகத் தொங்கிக்கொண்டிருக்கும். கட்டியிருக்கும் வேட்டியோ, விழுந்து விடப்போகிறேன் என்று கைக்குழந்தை போல நழுவிக்கொண்டே இடையை விட்டு இறங்குகின்ற காட்சியைத் தான் நாம் அன்றாடம் பார்க்கிறோமே!

விலையுயர்ந்த துணியாக இருந்தாலும், கலையழகு சொட்டுகின்ற ஆடையாக இருந்து அலங்கரித்துக் கொண்டாலும், பொருத்தமாக உடலில் அமர்கிறதா? அது பார்வையைத்தான் தருகிறதா என்றால் அதற்கான பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆடையில்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி என்றால், அழகான ஆடையணிந்தும் அரை மனிதராக ஏன் தோன்ற வேண்டும்,

உடைதான் போகிறது என்று விட்டு விட்டாலும், நடையும் அல்லவா மாறிப் போய்விடுகிறது. ‘பிராட்கேஜ்’ என்பார்களே அது போன்று பாதங்கள் பக்கவாட்டினைப் பார்த்து விரிந்து கொள்கின்ற பரிதாப நடையல்லவா இந்தத் தொந்தியால் வந்து விடுகிறது.

கால்களின் இடைவெளி அதிகமாகி விரிந்து கொள்ளும் பொழுது, நடக்கும் பொழுது கால்களின் மூட்டுக்களுக்குத் தான் எத்தனை வேதனை?

பலகை போன்ற அமைப்புள்ள வயிறு பானை போன்று, ஆகி, உடை, நடை, உணர்வு போன்றவற்றில் உட்புகுந்து கலக்கிவிட்டு, கலக்கம் ஏற்படுத்துகின்றது போதாது என்று, உடலுறவு நேரங்களிலும் நந்தியாகி வழிமறிக்கும் நிலையை நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனுபவித்தவர்கள் அந்த அவதியை நிச்சயம் உணர்வார்கள்.

அதை அகற்றத்தான் இத்தனை அக்கறையை இப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தொந்தியும் திருப்தியும்

ஆரம்ப காலத்தில் முந்திவரும் தொந்தியினை பணத்தொந்தி என்றும், படாடோபத்தின் சின்னம் என்றும் பெருமை பெற்றது மாறிப்போய், அதனை எவ்வாறேனும் அகற்றிவிடவேண்டும் என்ற ஆத்திர உணர்வுடன் அணுகிப் பார்க்கின்றனர் பலர். ஆண்டுக் கணக்காக அருமை பெருமையுடன் வளர்த்த தொந்தியை, ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே மரத்தின் ஆணிவேரறுப்பதுபோல தோண்டி எறிந்து விட முடியுமா? துடித்தால் முடியுமா? துடித்தாலும் போகுமா?

மனச்சோர்வும் மன மாச்சரியமும் மிஞ்சிப்போக, அவர்களுக்குள்ளே ஒருவித மனச்சாந்தியை வளர்த்துக் கொள்ளவும் முயல்கின்றனர். அந்த மனக் காயத்தை, உணர்வுகளும் நினைவுகளுமே ஆற்றுகின்றன. எப்படி?

கிராமத்துப் பெண்ணொருத்தி, ஒரு பட்டணத்து வாலிபனை மணந்து கொண்டு அவன் வீட்டுக்கு வருகிறாள். வந்ததும் வராததுமாக அவளை வரவேற்றது மாமியாரோ உறவினரோ அல்லள். வீட்டைச் சுற்றிப் பரவிக் கிடந்த சாக்கடை நாற்றமே. அவள் வீடு சாக்கடை ஒரத்தில் கட்டப்பட்ட ஒரு குடிசை.

முகஞ்சுளித்த புது மணப்பெண், அக்கம்பக்கம் பேசினாலும் ஆசைக் கணவனிடம் கொஞ்சினாலும் கூட அந்த சாக்கடை நாற்றத்தை சகிக்க முடியவே இல்லை என்றே சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். கேட்டவர்கள் அதற்குப் பதிலே கூறவில்லை. அவளுக்கு அது தன்னை அவமானப்படுத்துவது போலிருந்தது.

பத்து நாள் போனதும், அவள் அக்கம்பக்கத்தாரிடம் போய், பார்த்தீர்களா! நானும் இந்த வீட்டுக்கு வந்தேன். நாற்றமும் போய்விட்டது என்று கூறி மகிழ்ந்தாளாம். அவளது அறியாமையைக் கண்டு அனைவரும் சிரித்தனராம்.

நாற்றத்தினிடையே வாழ்ந்த அவனது நாசி, நாற்றத்தை ஏற்றுக் கொண்டதால் நாற்றமே தெரியவில்லை என்பது போல, தொந்தியின் சுமையைத் தாங்கித் தாங்கி அனுபவித்தவர்கள் கூட, நமக்கு ஒன்றும் அவ்வளவு பெரிதாகத் தொந்தி இல்லை. இது ஒன்றும் அவ்வளவு அசிங்கமாக இல்லை என்றெல்லாம் தமக்குள்ளே பேசி சமாதானம் செய்து கொள்கின்றனர்.

மனதிற்குள் ஆயிரம் சமாதானம் செய்து கொண்டாலும், மனிதர்கள் பார்வையின் கிண்டலை, நம்மால் மறைத்துக் கொள்ள முடியவில்லை.

உடலால் உண்டாகிற நோவுகள், உள்ளத்தில் ஏற்படுகிற கவலைகள், அக்கம்பக்கத்தார் அலைக்கழிக்கிற அவதிகள் எல்லாம், ஆத்மாவையே அலறச் செய்து விடுகின்றன.

ஆத்மா என்றால் அஞ்சவேண்டாம். ஆத்மா என்பது காற்று. உயிர்தான்.

உயிர்க் காற்றின் வலிமை குறைகிறபோது ஏற்படுகிற வேதனையைத்தான் ஆத்ம வேதனை என்பார்கள்.

ஆகவே, அவற்றையெல்லாம் தீர்க்க வழி உண்டா?

வழி ஏன் இல்லை. வழியை அறிவதற்கு முன் தொந்தி எவ்வாறு உண்டாகிறது என்பதைக் காண்போம்.