தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/3. தொந்தியைத் தொலையுங்கள்

விக்கிமூலம் இலிருந்து
3. தொந்தியைத் தொலையுங்கள்


தொந்தியின் கதை

தொந்தி வந்திருப்பது சிங்கார வாழ்வின் சின்னமல்ல; செல்வச் செழிப்பின் தீபம் அல்ல. ஆடம்பர வாழ்வின் அலங்கார ரூபம் என்று பலர் நினைப்பது போல் அல்லவே அல்ல. அது உடலின் தசைத்திசுக்களின் தளர்ந்த நிலையை மெலிந்த நிலையைக் கேலியாகச் சுட்டிக் காட்டுவதேயாகும்.

மூத்துக் களைத்த முதுமையில்தான் தொந்தி வரும். வாழ்வின் போராட்டக் களமாக விளங்கும் நடுத்தர வயதில் தான் தொந்தி வரும் என்பதெல்லாம் ஆதாரமில்லாத வாதம். அறிவற்றவர்கள் கூறும் நொண்டிச் சமாதானம்.

உழைப்பாளிகள் யாருக்குமே தொந்தி வராது; அதாவது உடலை வருத்துகின்ற வேலையாட்களுக்கென்று சொல்ல வரவில்லை. உற்சாகமாக ஒடியாடி வேலை செய்கின்ற அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.

எந்த வயதினராக இருந்தாலும் , எந்தப் பருவத்தினராக இருந்தாலும் அவர்களுக்குத் தொந்தி வராது. வரக்கூடாது. வரவேகூடாது. அப்படி உழைக்கின்ற வர்களுக்கும் தொந்தி வந்திருக்கிறது என்று கூறினால், அவர்களை நாம் நிச்சயம் இனங்கண்டுகொள்ளலாம்.

அந்த உழைப்பாளிகள், பயங்கரக் குடிகாரர்களாக இருப்பார்கள்.

மதுபானம் அருந்துவதற்கும், வயிறு பெருத்து விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்பதையும் இங்கு ஆராய்வோம். மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலுக்கு போதை தர மட்டும் தெரிந்திருந்தால் பரவாயில்லை. வயிற்றுக்குள்ளே சென்று பல வேலைகளைச் செய்யவும் அது தயங்குவதேயில்லை.

அவற்றில் முதலாவதாக, அந்தப் போதை பானம் சீரண உறுப்புக்களைப் பாதிக்கிறது. சீரணிப்பதற்கென்று அங்கே சுரக்கின்ற சீரண நீரினை, அமிலங்களின் சக்தியைக் கெடுத்து விடுகிறது. சுரப்பியையே நிலை தடுமாறச் செய்து விடுகின்றது. குடிகாரர்கள் வெறுங்குடியுடன் விட்டு விடுகின்றார்களா என்ன?

குடியுடன் கூட மீன், முட்டை, கறி இன்னும் பலவாறாக சேர்த்துக்கொள்கின்ற உணவு வகைகள் எல்லாம், கொழுப்புச் சத்தும் புரோட்டீன் நிறைந்தவைகளாகவே இருப்பதுடன், அதனை அதிக அளவும் உண்டு விடுகின்றார்கள். அதன்பின் அவர்களுக்கு என்ன உழைப்பு இருக்கின்றது?

சீரண உறுப்புக்களின் பாதிப்பு, சீரண அமிலங்களின் உற்பத்தியின் குறைப்பு, கடினமான சக்தியுள்ள உணவு வகைகள் அத்தனையும் உணவுப் பைக்குள்ளே விழுந்து தொடர்ந்து ஊறிக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு அநேக நாட்கள் என்று, அதிக நேரம் என்று உணவு வகைகளை இரைப்பைக்குள்ளே ஊற வைத்தால் உப்பிக் கொள்ளாதா அந்த இரைப்பை? அதன் மூலமாக அங்கே கொழுப்புச் சத்தும் கொஞ்சம் கூடவே வளர்ந்து கொள்கிறது. கட்டாந் தரையிலேயே புல் முளைக்கும் என்றால் தண்ணீர் விட்டு வளர்த்தால் எப்படி வளரும்?

அதேபோல தான் , குடிகாரர்கள் வயிறும் தடித்தனமாகப் பெருத்துக் கொள்கின்றன. அவர்கள் எத்தனை உழைப்பாளிகளாக இருந்தாலும் தொந்தி வருவதன் ரகசியம் இதுவே.

நாம் உண்ணும் உணவானது இரைப்பைக்குள் சென்று குழம்பாகி, வேறு பல மாற்றங்கள் பெற்று, சிறுகுடல் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து பெருங்குடல் பகுதிக்குப் போய், இதற்கிடையில் அதன் சத்துக்கள் இரத்தத்தால் உறிஞ்சப்படுகின்றவரை குறைந்தது மூன்று மணி நேரமாகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர். இங்கே எல்லாம் தலை கீழ் மாற்றங்கள் தானே நிகழ்கின்றன!

உணவும் தினவும்

இதன் காரணமாகத் தான் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவு உண்பது போதும் என்று முன்னோர்கள் கூறினர். ஒரு வேளை மட்டும் உண்பவன் யோகி; இரண்டு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்ற ஒரு பழம் பாடல் இவ்வாறு கூறியிருக்கின்றது.

மூன்று வேளை உண்பவனை ரோகி அதாவது நோயாளி என்ற அந்தப் பாடல் வழி நாம் ஆராய்ந்தால், நம் இன்றைய நாகரிகத்தின் உணவு முறையை எந்த வாழ்க்கையில் சேர்க்கலாம்?

தூங்கி விழித்தவுடன் தொடங்கி, நடு இரவு வரை நொறுக்குத் தீனியாகவும், விருந்தாகவும், வயிறு முட்ட உண்ணுகின்றார்களே! அந்த வயிறுகள் என்னவாகும்? வந்ததெல்லாம் கொள்ளும் கப்பலாக அல்லவா மாறும்!

பெருந்தீனி தின்பவர்களுக்கும் , பலமுறை உண்பவர்களுக்கும், அளவு தெரியாமல் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கும் ஏன் தொந்தி வராது? வளராது?

சாப்பிடுவதற்கு முன்னர் தன் வயிற்றைச் சுற்றி ஒரு வைக்கோலைக் கட்டிக் கொள்வார்களாம் நமது தமிழகத்தின் ஒரு பகுதியில் வாழந்த சில மனிதர்கள். சாப்பிட சாப்பிட வயிறு பெரிதாகி, அந்த வைக்கோல் அறுந்து விழும் வரை சாப்பிடுவார்கள் என்று கூட பலர் பேசக் கேட்டிருக்கிறோம்.

அவர்கள் வயிறெல்லாம் நிச்சயம் பானை என்பதை விட சாலாகவே இருந்திருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

உட்கார்ந்த உழைப்பு

நாள் முழுவதும் வேலை செய்து கொண்டுதானே இருக்கிறோம். ஏன் எங்களுக்குத் தொந்தி வருகிறது என்று அலுவலகத்தில் பணியாற்றும் அன்பர்கள் என்னிடம் கேட்டதுண்டு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே, அதிக நேரம் வேலை செய்தவாறு இருந்தால், நிச்சயம் தொந்தி வரத்தான் செய்யும். அலுவலக எழுத்தர்கள், தட்டெழுத்தாளர்கள் போன்ற பணிபுரிபவர்கள் அனைவரும், ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்யும்போது, அடி வயிறு மடங்குவது போல்தான் அவர்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.

அதிக நேரம் வயிறு மடிந்திருக்கும் பொழுது, வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. அவை அழுத்தப்படுவதன் காரணமாக, இயல்பாக இயற்கையாக செயல்படமுடியாமற் போகவே, சீரணம் தடைப்பட்டுப் போகின்றது.

இதுபோலவே உட்கார் ந்தே வியாபாரம் செய்பவர்களும், உட்கார்ந்து, அமர்ந்து உறங்கிப் பொழுது போக்குகின்றவர்களும் இந்தத் தொந்தியால் நிச்சயமாக ஆட்படுத்தப்படுகின்றனர். மேலும் புகைபிடிப்பதும், சீரண பகுதிகளை பாதிக்கிறது என்றும் அறிவியல் விரித்துரைக்கின்றது.

விளையாடினால் தொந்தி வருமா?

பொதுமக்களிடையே அதுவும் படித்தவர்களிடையே உலவுகின்ற இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. அதையும் இங்கே விவரிப்பதும் விவாதிப்பதும் அவசியமாகின்றது.

உடற்பயிற்சி செய்கின்றவர்களும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றவர்களும் உடற் பயிற்சியையோ விளையாட்டையோ விட்டு விட்டால், தொந்தி வந்துவிடுகிறது. அதனால் தான் நாங்கள் உடற்பயிற்சி செய்வதோ விளையாடுவதோ இல்லை என்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதை நம்புவோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

உடற் பயிற்சி செய்யும் பொழுதும் சரி, விளையாடுகின்ற காலங்களிலும் சரி, அவர்களின் உடலியக்கம் அதிகமாகிறது என்பது யாவரும் அறிந்ததே. அந்த இயக்கத்தின்போது அழிந்து போன தசைத் திசுக்களையும், இழந்து போன சக்தியையும் மீட்டுக்கொள்ள வேண்டியதற்காக தேவையான அதிக அளவு உணவினை உண்கின்றார்கள். நிம்மதியாக உறங்குகின்றார்கள். அதன் காரணமாக உடல் தெளிவாகவும் பொலிவாகவும் விளங்குகின்றது.

உடற்பயிற்சியை விட்டு விட்ட பிறகு, விளையாட்டை விட்டு ஒதுங்கி விட்டதற்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செய்த வேலையை அதாவது ஒழுங்காக செய்து வந்த பயிற்சியையும் விளையாட்டையும் விட்டு விட்ட பிறகு, அவர்கள் மனதில் தாங்கள் பெரிய வீரர்கள் என்ற எண்ணம் தான் ஓங்கியிருக்கிறது.

அதன் காரணமாக, நமது உடல் எதையும் தாங்கும் என்ற தைரியத்தில் உணவு வகையில், உடல் உறவு வகையில், நடைமுறையில் அனைத்திலும் இயற்கைக்குப் புறம்பான முறைகளில் ஈடுபடுகின்றார்கள், வாழ்கின்றார்கள்.

பயிற்சி செய்யும் காலத்தில் ஒருவர் பத்து இட்லி சாப்பிடுவதாக வைத்துக் கொள்வோம். பயிற்சியால் பசி ஏற்பட, அதற்காகச் சாப்பிட, சரியாக ஜீரணமாக, எல்லாமே முறையாக நடைபெறுகின்றது.

பயிற்சியை விட்டு விட்டவர்கள் தினசரி சாப்பிடும் பத்து இட்லியின் அளவைக் குறைப்பதில்லையே! அந்த அளவைத் தொடர்கிறார்கள். அதற்கும் மேலும் உண்கிறார்கள். வயிறு தாங்குமா? உண்டது ஜீரணமாகுமா? இப்பொழுது நமது நிலை என்ன? வலிமை என்ன? என்று எண்ணிப் பார்ப்பதே இல்லை.

அருமையாக ஜீரணித்த வயிறு, அழுக்கடைந்த சோம்பேறித்தனத்தால், அஜீரணம் கொள்கிறது. பிறகென்ன. இதை உணராத ஆட்கள் தாம் விளையாட்டையும் பயிற்சியையும் தங்கள் தவறான வாழ்க்கைக்கு உதவி கோரி, பலியாக்கி விடுகிறார்கள்.

இறுதியில் நடப்பது என்ன? உடல் என்பது இரத்தத்தாலும் தசைகளாலும் எலும்புகளாலும் ஆனதுதானே?

மனம் போல் விளையாடிவிட்டால், தேகம் தாங்குமா? உடற்பயிற்சியால், விளையாட்டால் பெற்ற சக்தியை அதற்குப் பிறகு மனம் போல பயன்படுத்திக் கொண்டு இயற்கையல்லாத வழிகளில் இயங்கி, கடைசியில் தமது தவறை மறைத்து விட்டு விளையாட்டின் மீது பழி சுமத்தி விடுவது நன்றி மறந்த தன்மையல்லவா?

ஆகவே, உணவு முறையில் உட்கார்ந்து உழைக்கின்ற வகையில், உடல் உழைப்பற்ற நிலையில், மதுபான வழியில் வயிறு பெருத்துப்போகின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது.

மேலே காணும் முறைகளில் நடந்து கொண்டால், நடுத்தர வயதிலும், முதுமையிலும் தான் தொந்தி வரும் என்பதில்லை, பள்ளிப்பருவத்திலும் கூடவரும்.

உடலைப் பொறுத்த வரையில், தவறாக நடந்து கொண்டால், தண்டனை உடனே கிடைக்கும் என்ற உண்மையை உலகத்தார் புரிந்து கொள்ள வேண்டும். முழுதாக இருக்கும் வரைதான் பானை. கீழே விழுந்து உடைந்தால் அதற்குப் பெயர் ஒடு.

அதேபோல் தான் போற்றிக் காக்கின்றவரைதான் உடல் வலிமையோடு இருக்கும். வனப்போடு சிரிக்கும். பணியாளராக உழைக்கும். பலப்பல இன்பங்களை அளிக்கும்.

ஒற்றையடிப் பாதையை விட்டு வேறிடத்தில் கால் வைத்தால், நெருஞ்சில் முள் குத்தும் என்பார்களே, அதுபோல வாழ்க்கைப் பயணத்தில் வயிற்றினைக் காக்கும் வழி கண்டு பின் சென்றால்தான் வாழ்வு சிறக்கும். இல்லையேல் நோயே முன் நின்று சிரிக்கும்.

ஆகவே, வராததற்கு முன்னமேயே தொந்தி வராத வழிகளைக் கடைப்பிடிப்போம். மீறி வந்து நம்மிடையே இருக்கின்ற தொந்தியைத் தொலைப்பதற்குரிய வழி வகைகளை நாம் அறிந்து, உய்த்துணர்ந்து, ஒரே மனதுடன் நினைவுடன் பின்பற்றி அதே இன்பம் விளைய தொந்தியைத் தொலைக்கும் வழிகளை இனிக் காண்போம்.