பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகப் பழங்காலந்தொட்டே வடமொழியிலுள்ள சமய இலக்கியங்களில் பதினெட்டுப் புராணங்கள் என்ற ஒரு தொகுதி இடம் பெற்று வந்துள்ளது. இதனையடுத்து பதினெட்டு உப புராணங்களும் காலாந்தரத்தில் இடம் பெற்றுள்ளன. புராணங்கள் என்ற பெயர் பழைமையானவை என்ற பொருளிலேயே இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அந்நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை, உணவு முறை, எண்ண ஓட்டங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்கள் வாழ்க்கையில் கொண்ட விழுப்பொருள்கள் (Valuesin life) என்பவற்றின் ஒட்டுமொத்த தொகுதியே ஆகும். இந்தக் கலாச்சாரத்தை அறிய அந்த இனத்தின் வரலாறு, இலக்கியம் என்பவை பேருதவி புரிகின்றன. ஒரு குறிப்பிட்ட நூற்றாண்டில் தோன்றிய வரலாறு அந்த மக்கள் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வெளியிடுகின்றது. ஆனால் இலக்கியம் என்பது அந்த நிகழ்ச்சிகளுக்கு அடித்தள மாகவும், பின்னணியாகவும் உள்ள அந்த மக்களின் எண்ண ஒட்டங்கள், கருதுகோள்கள் (concepts), குறிக்கோள்கள் (aims), விழுப்பொருள்கள் என்பவற்றை விளக்க உதவுவ தாகும். ஒரு நூற்றாண்டில் தோன்றிய இலக்கியம், அது தோன்றிய காலத்தை மட்டும் குறிக்காமல் அந்த இனத்தின் பல நூற்றாண்டு முந்தைய வாழ்வு முறையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. அத்தகைய இலக்கியங்களுள் புராணமும் ஒன்றாகும்.