பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


காற்றையே உணவாகக் கொண்டு கதிரவனது சுழற்சியோடு உடன் திரியும் அருளுள்ளம் படைத்த முனிவர்கள் சிலர் உள்ளார் என்பதும், அவர்களது சடைக்கற்றை யினாலே கதிரவனது வெம்மை மறைக்கப் பெற்று மன்னுயிர்கள் வாழ்வுக்கு வேண்டுமளவு கதிரவனது வெம்மை கொடுக்கப் பெறுகிறது என்பதும் நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும். இவ்வாறு ஞாயிற்றின் மிகுவெப்பத்தைத் தணித்து மன்னுயிர்களுக்கு வேண்டுமளவு குறைத்துத் தரும் விரிசடை முனிவர்கள் 'வேணாவியோர்' என வழங்கப் பெறுவர். மன்னுயிர்களின் துயர் நீக்கும் இவர்களுக்கு இறைவனது திருவருள் உடனிருந்து உதவி புரிகின்றது என்பதனை,

'விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை'

என நக்கீரனாரும்

'சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணையடி தொழுதேம்'

என இளங்கோவடிகளும் முறையே முருகப்பெருமானை யும் கொற்றவையையும் பரவிய பாடல்களில் போற்றியுள்ளனர். இவ்வாறு உலக நலன் கருதி ஞாயிற்றைச் சூழ்ந்து வரும் விரிசடை முனிவர்களும் வியப்புற்று மயங்க வளைந்தசிறகினையும் கூரியநகத்தினையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குப் பயந்து தன்னை யடைக்கலமாக அடைந்த குறுநடைப் புறாவினது வருத்தத்துக்கு அஞ்சி, தனது துயரத்தைப் பொருட்படுத்தாது புறாவினைத் தொடர்ந்த பருந்தினது பசியை