பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 பதினெண் புராணங்கள் என்ற வரத்தினை, நாராயணனிடம் இருந்து பெற்றிருந்தார். ஒரு சமயம் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட பொழுது, சடவிருங்காவில் இருந்த முனிவர்களுக்கு, தன்னிடம் இருந்த அரிசி, பழங்கள் முதலியவற்றைக் கொடுத்துப் பசி தீர்த்தார். அவர்களும் பெரிதாக மகிழ்ந்தனர். சில நாட்கள் கழித்து அம்முனிவர்கள், பஞ்சம் தீர்ந்தவுடன் கெளதம முனிவரிடம் சொல்லாமல் அவரது ஆசிரமத்தை விட்டுச் சென்றுவிட்டனர். அவ்வாறு செல்லுமுன், கெளதம முனிவர் ஏதோ தவறு செய்து விட்டது போலவும், அதன் காரணமாகவே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் ஒரு சூழ்ச்சி செய்திருந்தனர். அந்த முனிவர்கள் தம்முடைய சக்தியால் ஒரு பசுவை, கெளதம முனிவரின் ஆசிரமத்திற்கு வரவழைத்து அவர் பார்க்கும் இடத்தில் நிறுத்தி வைத்தனர். வெளியே சென்றிருந்த முனிவர், வந்தவுடன் பசுவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியுடன் நீர் அருந்தக் கொடுத்தார். நீரை அருந்திய பசு, இறந்துவிட்ட பசுவினைப் போல் கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்ட மற்ற முனிவர்கள் கெளதம முனிவர் ஒரு பசுவினைக் கொன்று விட்டார் என்று கூறி, அதனாலேயே தாங்கள் அந்த ஆசிரமத்தை விட்டுச் செல்வதாகவும் கூறிச் சென்றனர். கெளதம முனிவர், இமயமலை சென்று இப்பாவத்தைப் போக்க எண்ணி சிவபெருமானை நினைந்து தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தன்னுடைய முடியினைக் கொடுத்தார். அந்த முடியினை கெளதம முனிவர் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். அதிலிருந்து கோதாவரி கங்கை உற்பத்தியாயிற்று. அந்த நீர் பட்டவுடன் இறந்து கிடந்த பசு உயிருடன் எழுந்ததைப் பார்த்த கெளதம முனிவர், தன்னை மற்ற முனிவர்கள் ஏமாற்றியதைத் தெரிந்து கொண்டார்.