பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பதினெண் புராணங்கள் மது, கைடபர்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். "இரண்டாவது மன்வந்திரத்தில் எங்கும் நீராக இருந்த பொழுது, விஷ்ணு அந்த நீரில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது இரண்டு காதுகளில் இருந்தும் இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் திருமாலின் உந்தியில் இருந்த பிரம்மனைத் தாக்கினார்கள். நீண்ட போரில் அவரை வெல்ல முடியாத நிலையில் பிரம்மன் கண்களை மூடி மகாமாயையை தியானித்தார். உறங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவின் கண் இமைகளில் இருந்தும், வாயிலிருந்தும், புஜங்களிலிருந்தும் மகாமாயை வெளிப் பட்டாள். மகாமாயை வெளிப்பட்டதால், விஷ்ணுவே உறக்கத்தினின்று விழித்து விட்டார். நிலைமையைப் புரிந்து கொண்டு மது, கைடபர்களுடன்டதானே போர் புரியத் துவங்கினார். இந்தப் போர் ஐயாயிரம் ஆண்டுகள் நீடித்தது. இறுதியாக மகாமாயையின் சக்தியால் மது, கைடபர்கள் உள்ளத்தில் தாங்களே வெற்றி பெற்றது போல ஒரு மாயத் தோற்றம் உண்டானது. அதை நம்பி அவர்கள் எக்களிப்புடன் விஷ்ணுவைப் பார்த்து, “நாங்கள் இருவரும் உனக்கு ஒரு வரம் தருகிறோம். நீ எது கேட்டாலும் தருகிறோம்" என்றார்கள். உடனே விஷ்ணு, “நீங்கள் இருவரும் என் கையால் சாக வேண்டும்” என்றார். மது, கைடபர்கள் ஏற்கெனவே வாக்குக் கொடுத்துவிட்டபடியால், வேறு ஒன்றும் செய்ய முடியாமல் “நீ கேட்ட வரத்தைத் தருகிறோம். அதில் ஒரு சிறு வரையறை உள்ளது. தாங்கள் எங்களைக் கொல்வது, எங்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியதுதான். ஆனால் தண்ணீர் இல்லா இடத்தில்தான் எங்களைக் கொல்ல வேண்டும்” என்றனர். உடனே விஷ்ணு அந்த அசுரர்களைத் தன் தொடைமீது வைத்துத் தன் சக்கரத்தினால் அவர்களைக் கொன்றார்.