பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t.இ. தொல்காப்பியம்-போருளதிகாரம்-உரை வளம்

படை வீரர் முதலியோர் தம் விருப்பத்தின்படி பகைவர் நாட்டுப் பசு நிரையினைக் கவர்தற்குரியரல்லர் என்பதும் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆ தந்து ஓம்பல் என ஆசிரியர் கூறுதலாற் புலனாம். இவ்வாறு மன்னது ஆணையின் வண்ணம் படை மறவர் மேற்கொள்ளுதற்குரிய வேந்துறு தொழிலாகிய நிரைகவர்தலை வேந்தனது ஆணைபெறாது படைவீரர் தாமே தம் விருப்பப்படி தன்னுறு தொழிலாகவும் நிகழ்த்துதற்கு உரியர் என்பது பன்னிருபடலம் என்னும் புறப்பொருள் இலக்கண நூலின் கொள்கையாகும்,

'தன்னுறு தொழிலே வேந்துறு தொழி லென் றன்ன இருவகைத்தே வெட்சி யென்ப என்பது பன்னிருபடலம்.

வென்றிவேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றிகன்முனை ஆ தந்தன்று' என்பது புறப்பொருள் வெண்பாமாலை.

இவ்வாறு நாடாள் வேந்தனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தம் நாட்டிலும் பிற நாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்து கொள்ளுதற்குரியர் என அரசியல் நெறிமுறைக்கு மாறுபட்ட கொள்கையினைக் கூறுவது பன்னிருபடலமாதலின், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலம், தொல்காப்பியனார் கூறினா ரென்றல் பொருந்தாது” என்றார் இளம்பூரணர்.

இந்நூற்பாவிலுள்ள ‘ஆதந்தோம்பல்” என்ற தொடர்க்கு ஆவினைக் களவினானே கொணர்ந்து பாதுகாத்தல் எனப் பொருள் வரைந்து, ஒம்புதலாவது மீளாமற் காத்தல் என விளக்கங் கூறுவர் இளம்பூரணர்.

ஆதந்தோம்பல்” என்பதனை ஒருதிறத்தார்க்குரிய ஒரு வினையாகக் கொள்ளாது, பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற்கொண்டு தருதலும், அந் நிரைக்குரியோர் அந்நிரை களை மீட்டுச் சென்று ஒம்புதலும் என இருதிறத்தார்க்குரிய இரு வேறு வினைகளாகக் கொண்டு பொருளுரைப்பர் நச்சினார்க் கினியர். முரண்பட்ட வேந்தர் இருவரிடையே நிகழும் நிரைகவர் தலும் நிரைமீட்டலும் ஆகிய இவ்விருவேறு செயல்களும் போர்த் தொடக்க நிகழ்ச்சிகளாய் வெட்சி என்னும் ஒரு திணையாய் அடங்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.