பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 510 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வகையானும் ஒருவனைப் புகழ்தலால் பாடாண் பாட்டாயிற்று' என்பது இக்குத்திரத்தின்கீழ் இளம்பூரணர் தரும் சிறப்புரை யாகும்.

இனி, இதற்கு உரைகாணும் நச்சினார்க்கினியர் கூறுவது.முதற்கண், 'பாடாண்திணை தேவரும் மக்களும் என இருதிறத் தார்க்கே உரிய என்பார். இவ்விரண்டனுள் தேவர்பகுதி இவை யென்பதுணர்த்துகிறது (இச்சூத்திரம்) என்று இச்சூத்திரக் கருத்தை வரைந்து கொள்ளுகின்றனர். பின்னர்த் தாம் வரைந்து கொண்ட கருத்துடன் பொருந்த, “பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்துமுடியும் அறுமுறை வாழ்த்தின்கண்ணும், அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருளை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும், மேல்பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களும் எனப்பகுத்த இரண்டனுள்-தேவர்க்குரித் தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவரும் என்று கூறுவார் ஆசிரியர்' என்றவர் கூறினார். இதன் பிறகு தாம் கூறும் புதுப் பொருளைப் பொருந்திக் காட்டவேண்டி விரிவுரையிற் பல வருவித்துக் கூறுவர். அவையிற்றுள் இங்குச் சில கூறுதும்.

அமரரான தேவர் பரவப்படுதலேயன்றி, 'முனிவரும் பார்ப் பாரும் ஆனிரையும் மழையும் முடியுடைவேந்தரும் உலகு மாக ஆறும் பரவப்படுங்கால் அப்பராவு தேவர் கண்ணே வந்து முடியு மென்பர் 'அன்றியும் பராவப்பெறுந் தேவரல்லா இவ்வாறும்’ சிறப்பு வகையால் அமரர் சாதிப்பால என்றல் வேத முடிவு' என ஒரமைதி காட்டுவர். இனி புரைதீர் காமம் புல்லியவகை’ என்ப தில் புரையைக் குற்றமென்னாது அதற்கு மாறாய உயர்ச்சியெனக் கொண்டு உயர்ந்த மறுமைப்பயனாம் வீடுபேறு வேண்டாமல் இழிந்த இம்மைப்பயன்களை விரும்பித் தேவர்ப் பராவுதலை ஆசிரியர் "புரைதிர் காமம் புல்லிய'தாகக் கூறினாரெனக் கொள்ளவைக்கின்றார். 'ஒன்றன் பகுதி ஒன்றும் என்றதற்கு 'உரித்தாம் பகுதியெல்லாம் தொக்கு ஒருங்குவரும்’ என்றுரை கூறுவர் இச்சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியர் கண்ட இப்பொருள்

1. திருஞானசம்பந்தர் அருளிய வாழ்க அந்தணர், வானவர், ஆணினம் ? வீழ்க தண்புனல், வேந்த னும் ஒங்குக...... வையகமுந் துயர் தீர்கவே' என வரும் திருப்பா சுரத் திருப்பாடற்பொருளை அடியொற்றி அமரர்கண் முடியும் அறுவகை யானும் என வரும் தொல்காப்பியத் தொடர்க்கு நச்சினார்க்கினியர் இங்ங்னம் புதியதொரு உரை விளக்கங் கண்டார் எனக் கரு த வேண்டியுளது.