பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலிங்க புராணம் 469 படைத்தார். மிகவும் மனம் மகிழ்ந்த தர்ம தேவதை அவ்விருவரும் சொர்க்கம் செல்ல ஆசி வழங்கினார். இக்கதையினை பிரம்மன் கூறக்கேட்ட முனிவர்கள், தாம் சிவபெருமானை அவமதித்ததை நினைத்து வருந்தி, அவர் மனம் மகிழ என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, பிரம்மனும் சுவேதாவின் கதையைக் கூறத் தொடங்கினார். சுவேதா முனிவரின் கதை : முன்னொரு காலத்தில் சுவேதா என்ற முனிவர் சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். எந்நேரமும் சிவபெருமானையே வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையைவிட்டுச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. யமதேவன் சுவேதா முனிவர் முன் தோன்றினான். யமனைக் கண்டு சுவேதா முனிவர் சிறிதும் மனம் கலங்கவில்லை. சிவபெருமானை வணங்கினால், இறப்பினால் எத்துன்பமும் ஏற்படாது என்று நினைத்து, சிவனை வழிபடத் துவங்கினார். யமதேவன் சுவேதா முனிவரைப் பார்த்து, "உன்னுடைய நேரம் இப்பூமியில் முடிந்து விட்டது. இனி நீ எனக்குக் கீழ்ப்படிய வேண்டும், சிவனை வணங்குவதால் எப்பயனும் இல்லை, வா. சீக்கிரம் போக வேண்டும்” என்றான். அவரைக் கெகாண்டு செல்வதற்காக எல்லா ஆயத்தங்களும் செய்யும் பொழுது, சிவபெருமான் பார்வதி, நந்தி மற்றும் சிவகணங்களுடன் அங்கு வந்தார். சிவனுடைய பார்வை பெற்றவுடன் யமதேவன் மயக்கமுற்று வீழ்ந்து மரணமடைந்தான். சுவேத முனிவர் காப்பாற்றப் பெற்றார். இக்கதையைக் கூறி முடித்த பிரம்மா, முனிவர்களைப் பார்த்து, சிவபெருமானை வணங்குவதால் ஏற்படும் பயனைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? உடனே சென்று சிவ பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.