பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 331 முண்டர்கள் படைகள் அனைத்தையும் அம்பிகை எரித்துச் சாம்பலாக்கினாள். தன் நெற்றியிலிருந்து காளியை உருவாக்கினாள். கரிய நிறமும், எல்லையற்ற படைக்கலங்களும், மிக நீண்ட நாக்கும் உடைய மகாகாளி உருவானாள். அம்பிகையை வணங்கி, “எனக்கிடும் பணி யாது?’ என்று கேட்க, அம்பிகை "உன் வாயைத் திறந்து கொண்டிரு எத்தனை அசுரர்களையும், அவர்கள் ஆயுதங்களையும் விழுங்க முடியுமோ அத்தனைனையும் விழுங்கிவிடு” என்றாள். மகாகாளி சிம்ம வாகனத்தில் ஏறிச் சண்ட முண்டர்களின் தலையை வாளால் வெட்டினாள். காளி அம்பிகையிடம் சென்று, 'தாயே என் பணி முடிந்து விட்டது. சும்ப நிசும்பர் களை நீயே அழித்தருள்வாயாக’ என்று வேண்டினாள். காளியின் வீரத்தைப் போற்றிய அம்பிகை சண்டனை வென்றதால் சண்டி என்றும், முண்டனை வென்றதால் சாமுண்டி என்றும் பட்டம் அளித்தாள். இந்த நிலையில் சும்பன் பெரும் படையுடன் போருக்கு வந்தான். சும்பன் போருக்கு வந்ததும், அவன் பலத்தை எண்ணிச் சிவன் தன் சக்தியாகிய மகேஸ்வரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், பிரம்மன் பிராமியையும், கார்த்திகேயன் கெளமாரியையும், இந்திரன் ஐந்திரியையும் அம்பிகைக்குத் துணையாக அனுப்பினர். இறுதிப் போர் நிகழுமுன்னர் அம்பிகை சும்பனிடம் சிவனைத் தூதாக அனுப்பினாள். சும்பனிடம் சென்ற சிவன், “உன் படைகளும், சண்ட முண்டர்களும் அழிந்து போனதை நீ பார்த்தாயல்லவா? மேலும் போர் செய்து அழியாமல் அமைதியாகக் கீழ் உலகம் சென்று பிழைத்துக் கொள்வதானால் அம்பிகை உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள்" என்று கூறினார்.