பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


அடுத்து ஒட்டப் பந்தயம் தொடங்கியது.

காளை மாடுகள் ஐநூறு முழ ஓட்டப்பந்தயம் ஓடின.

வேட்டை நாய்கள் ஆயிரமுழ ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டன.

குதிரைகள் இரண்டு கல் பந்தயம் ஓடின.

மான்கள் ஐந்து கல் பந்தயம் ஓடின.

கடைசியாக முயல்கள். அவை ஆறுகல் பந்தயம் ஒடத் தொடங்கின.

ஆமையோடு போட்டியிட்டுத் தோற்ற முயலின் கதையைக் கூறி அப்படியாகிவிடக் கூடாது என்று எல்லா விலங்குகளும் பேசிக் கொண்டன.

பத்து முயல்கள் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டன.

அதில் சிவபக்தி மிகுந்த முயல் ஒன்று இருந்தது. பந்தயத்துக்கு வரும் முன்னாலேயே காட்டுக்குளத்தின் கரையில் அரசமரத்தடியில் இருந்த சிவலிங்கத்திற்கு லிங்க பூசை செய்து விட்டு அது பந்தயத்திற்கு வந்திருந்தது.

“கடவுளே என் கால்களுக்கு விசையைக் கொடு. எல்லாருக்கும் முன்னால் நான் ஓடி வந்து முதல் பரிசு பெற எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன்” என்று பாடித் தொழுதது.