பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அவள்…. அவளாக….

சூட்கேஸை கவ்விய வலது கையைத் தூக்கி நெற்றி மட்டத்திற்கு கொண்டு வந்து, சல்யூட் அடித்தான். இப்ப்டி அவனைக் காரியப்படுத்திய காரணகர்த்தாவான நிர்வாக அதிகாரி தனசிங் 'ஏய்யா.. யூனிபாரம் போடுறதில்லியா... அரசாங்கம் பணம் கொடுத்து துணி வாங்கிக் கொடுக்குது. தைக்கிறதுக்கு காசும் தருது. அந்தத் துணியையாவது வைத்திருக்கியா, இல்ல வித்திட்டியா...' என்று கேட்டபடியே உள்ளே வந்தார். ராமசாமி ஏதோ தைத்தது போல் படியிறங்கி ஓடினான்.

வர்த்தினிக்கு, நிர்வாக அதிகாரி, ராமசாமியை அவமானப் படுத்துவதுபோல் பேசியது பிடிக்கவில்லை. கண்டித்தாக வேண்டும். ஆனாலும் மென்மையான கண்டன வார்த்தைகளை விடுவதற்கு முன்பாக வில்லாய் வளைந்து கேட்டாள்.

'என்ன மிஸ்டர் தனசிங் திடுதிப்புன்னு...

'ஊர்ல இருந்து மாமனார் வந்திருக்கார்... ஒரு நாள் லீவு வேணும் மேடம்'.

'மாமனாருக்காக லீவு போடுற ஒரே மாப்பிள்ளை நீங்கதான்னு நினைக்கேன்'.

"அவரோட மாமனார் வெறுங்கையோட வந்திருக்க மாட்டார்".

மேற்குப் பக்கமாக உள்ள அறையிலிருந்து சூட்டு கோட்டோடு வெளிப்பட்டு, அக்காவின் அருகே போய் நின்றபடியே, தனது "வெறுங்கை" தந்தையை விமர்சித்த கணவனுடன் சொல்லாட, சமையல் கட்டிலிருந்து கீதா வெளியே வந்தாள். கம்ப்யூட்டர் இன்ஜீனியர் மாதம் முப்பதாயிரம் சம்பளம். அப்படியும் மாமனார் கையை எதிர்பார்க்கிற பிச்சைக்காரத்தனம். மனைவியானவள். முகபாவனைகளால் கணவனுடன் போர் தொடுத்தபோது, வர்த்தினி, நிர்வாக அதிகாரியை புன்னகைக்காமலே கேட்டாள்.

'ராமசாமியை நீங்க இவ்வளவு கடுமையா பேசியிருக்கப்படாது...

நிர்வாக அதிகாரியான தனசிங், இன்கிரிமென்ட் கட்டானதுபோல் பதறியபோது, அவனுக்குப் பதிலாக வர்த்தினியின் தம்பி ரவிக்குமார், பதிலளித்தான்.