பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உப்பைச் தின்னாதவன்

அந்த அலுவலகம், 'கோரப்பட்ட' நேரம் - அதாவது காலை பதினோரு மணி ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வேலையைத் துவக்கவில்லையானாலும், வேலைக்காக கூடிவிட்ட வேளை...

இவர்களுக்காக, 'காபி' வாங்கிக் கொண்டு திரும்பிய வேதமுத்து, அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவுடனேயே, என்னமோ - ஏதோவென்று எக்கி எக்கி ஓடினான். யூனிபார பழுப்பு சட்டைக்கு மேல், பூணுல் போட்டது மாதிரியான வெள்ளை பிளாஸ்டிக் பட்டையின் அடிவாரத்தில் தொங்கிய 'இரண்டு லிட்டர்' பிளாஸ்க். கிட்டத்தட்ட அறுந்து விழப்போனபோது, அவன் வாசற்படிக்கு வந்துவிட்டான். அங்கே கண்ட காட்சியைப் பார்த்ததும், ஒரு காலை வாசல் படியில் வைத்து, தூக்கிய மறுகாலை, தலையில் பதிய வைக்காமல், நிலைப்படியினை ஆதாரமாய் பிடித்தபடி அவன், ஒற்றைக் காலில் நின்றபோது -

அந்த அலுவலகத்திற்குள் ஏறிக் கொண்டிருந்த ஒற்றைக் குரல், இப்போது எகிறியது.

'என்னம்மா... காது குத்தறே... ஒருத்தன் போயிட்டா... ஆபீஸே போயிடுமா என்ன... முதலமைச்சர், கவர்னரை வீட்டுக்கு அனுப்பினாலும் கவர்னர், முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பினாலும் சர்க்கார்னு ஒண்ணு இருக்கத்தானமா செய்யும்? இந்திராகாந்தி செத்துட்டதால கவர்ன்மெண்ட் செத்துட்டா என்ன? அப்படி இருக்கையிலே... இவன் சுண்டக்காய் ஆபீஸரு... பிள்ளைக்காப் பயல்... இவன் போயிட்டால்... எங்க பணமும் போகணும்னு அர்த்தமா... தெரியாமத்தான் கேக்கேன். விளையாடுறதுக்கு ஒனக்கு வேற ஆளு கிடைக்கலையா...'