பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

67


தலைமை குமாஸ்தா சோணாசலம், ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, அலுவலகத்திற்கு அப்போதுதான் வந்த அக்கெளண்டன்ட் சிங்காரம் தான் லேட்டாக வந்ததற்கு மற்றவர்கள் தான், வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தவன்போல், மதர்ப்புடன், அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து வந்தான்.

தலைமை குமாஸ்தா, தான் அறிமுகப்படுத்திக் கொண்டிந்த டைப்பிஸ்ட் பெண்ணை, அம்போ என்று விட்டுவிட்டு, சிங்காரத்தைப் பார்த்தார். அவனை முதலில் அறிமுகப்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் திட்டுவான்.

"ஹி ஈஸ். சிங்காரம். லார்" என்றார் சோனாச்சலம், "கிளாட் டு மீட் யூ மிஸ்டர்... சதாசிவம்" என்று சொல்லிக் கொண்டு, மானேஜர் சதாசிவத்தின் கரங்களைக் குலுக்கினான் சிங்காரம். எல்லோரும் 'ஸார்' போடுகையில், இவன் மட்டும் மிஸ்டர் என்று போட்டதை சதாசிவம் கவனிக்கத் தவறவில்லை. அதோடு, அவன் பேசிய் தோரணை, அவன் என்னமோ மானேஜர் மாதிரியும், தான்தான் அக்கெளண்டண்டாக வந்திருப்பது போலவும் நினைப்பதாகத் தோன்றியது. முதியவர்கள்கூட பதவிக்குரிய மரியாதையைக் கொடுக்கும்போது, சம வயதுள்ள ஒருவன், 'ஆப்டர்ஆல்' ஒரு அக்கெளண்டண்ட் நடந்து கொண்ட விதம், மானேஜர் இளைஞனுக்கு பிடிக்கவில்லை. அவன், இந்த இடத்தில், ஏதாவது பேசி, தனது சுப்பீரியாரிட்டியை காட்டியாக வேண்டும். காட்டினான்.

"கிளாட் டு மீட் யூ... ஒர்க் ஈஸ் காட்.. உங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும்... என்கிட்ட வரலாம்... பட்... டிஸ்லிபிளின் இஸ் ரொம்ப முக்கியம்... நான்... லண்டன்ல பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் கோர்ஸ்... படிக்கும் போது... அங்கே ஒரு சம்பவத்தை சொன்னாங்க. அங்கே ஒருவர்...

அலுவலக ஊழியர்கள் அனைவரும், மானேஜர் விளக்கப்போகும் சம்பவத்தை அறியத் துடிப்பவர்கள்போல், கண்கொட்டாமல், அவர் வாயையே பார்த்தார்கள். அதிலே சில பாவலாப் பேர்வழிகளும் இருக்கலாம்.