பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைப் பாக்கி


'என் மக்கா!... நான் இன்னும் முழுசா சாகல... டாக்டர் காந்தராசு சொல்லுறதக் நல்லா கேளுங்க'...

கனகம்மா பாட்டி, இப்படிச் சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும், அந்தக் கருத்து சொல்லாக வில்லை. சொல்லின் ஏவுகணையான நாக்கு எங்கே உள்ளது என்று கூட கண்டறிய முடியவில்லை. அபிநயமாய் சொல்வதற்கோ, காலோ கையோ தன்னோடு இருப்பது போன்ற உணர்வும் இல்லை. அதோடு அந்த டாக்டர் எங்கேயிருந்து சொல்லுகிறார் என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவளுக்கு தான் எங்கே இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்ற குழப்பம். கனவா.. நனவா.. உயிருலகமா... மரணலோகமா... வீடா... அல்லது காடா... என்று அடையாளப்படுத்த முடியாத மரண மயக்கம்... தற்காலிக தூக்கத்திற்கும் நிரந்தர துக்கத்திற்கும் இடைவேளையான இடைக்கால மரணம் அல்லது உயிர்ப்பு... தலையும் கழுத்துமே தானாகிப் போன பிரம்மை...

இந்தச் சமயத்தில், எங்கேயோ போய்விட்டு, அப்போதுதான் வந்த பாட்டியின் மகன் ராமய்யா விற்கு, டாக்டர் காந்தராஜ் மற்றவர்களிடம் சொன்னதையே மீண்டும் சொன்னார். டாக்டராக இருந்தாலும், மனித உடம்பை சதை இயந்திரமாய் பார்க்காத மனிதாபிமானி.

”பாட்டிக்கு இருதயம் நின்னுபோய் இருக்கு. ஆனாலும் மூளை வேல செய்யுது. பொதுவா ஒருத்தருக்கு முதலாவது மூளை நின்னுடும். அதுக்கு பிறகுதான் இருதயம் அடங்கும். இதைத்தான் கிளினிக்கல் சாவு என்கிறோம். ஆனால், நூற்றில் ஒரு கேஸாக பாட்டிக்கு, இன்னும் மூளை வேல செய்யுது. அதற்கு முன்னாலேயே இருதயம்தான் நின்னுட்டு. அதனால உங்கம்மாவை... பக்கத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு