பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடி(ய)ப் பருவம்

மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த குறிப்பிட்ட இடத்தருகே வரும்போது மட்டும், சிறிது நிற்பார். பல்லைக் கடித்து சாடை மாடையாய்ப் பார்ப்பார். பின்னர் அங்கே காணும் காட்சியை கண்வாங்கினாலும், மனம் வாங்க முடியாமல், முணுமுணுத்தபடியே நகருவார். கால்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும் சிந்தனை அலைகள், அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தன. யோசித்து யோசித்து யோசனையே ஒரு செயலாகிவிட்டது.

அந்த பச்சை மழலையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும். அந்தப் பாம்புப் பயலும் ஒரு வழியாக வேண்டும். அந்தச் சிறுமியும் சேதாரம் இல்லாமல் வழிப்படுத்தப்படவேண்டும். எப்படி என்பதுதான் பிரச்சனை. அதைக் கண்டுபிடிக்கவே இந்த நடை.

மார்த்தாண்டம், குறிப்பிட்ட அந்த இடத்தருகே வழக்கம் போல் மூச்சிளைக்க நின்றார். உள்ளே ஓரங்கட்டிப் பார்த்தார். இப்போது பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இவர் கண்களை மூடிக்கொண்டே சிந்தித்தார். இப்போது செயல்படவில்லையானால், எப்போதும் செயல்பட முடியாது. ஆனாலும், அவர், மனோவேகத்திற்கும், உடல் தளர்ச்சிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தார்.