பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சு. சமுத்திரம் ☐

இப்படி நடக்க வேண்டுமென்று நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் இருக்கும் நம்மைப் போன்றவர். இவர் பேச்சில் நியாயம் இருந்தாலும், கேட்பார் கிடையாது. இந்தப் பாத்திரத்தை, எனது பெரும்பாலான சிறுகதைகளிலும், நாவல்களிலும் கொண்டு வந்திருக்கிறேன். இதேபோல், குட்டாம்பட்டியை, மையமாக்கி பல கதைகள் எழுதுகிறேன். பழமையில் ஊறியிருப்பவர்களைச் சித்தரிப்பதற்கு குட்டாம்பட்டி என்ற ஊரை எழுதினேன். “ஒரு கோட்டுக்கு வெளியே” நாவலில் குட்டாம்பட்டி வந்தது. வெறுமனே பேசிக்கொண்டு கிராமத்துப் பாணியில் சொல்லப் போனால், ‘கீராமுட்டித்தனமாக’ அல்லது ஏட்டுச் சுரைக்காயாக இருப்பவர்களை சுட்டிக்காட்ட “சட்டாம்பட்டி” என்ற பெயரைக் கொண்டு வந்தேன். ஒருவரிடம் மணி கேட்கும்போது, அவர் அதைத் தாமதமாகச் சொன்னால், அதற்காகவே, அவரைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்லும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காட்ட “வெட்டாம்பட்டி” என்ற ஊரைப் பெயராகச் சூட்டினேன். அதே சமயம் காலப்போக்கில் இந்த மூன்று பட்டிகளும் மாறுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்ட நான் தவறவில்லை. இந்த மூன்று வித அளவுகோல்களை அதாவது பழமைவாதிகள், புதுமை என்று பெயரில் உள்ள பொய்யர்கள், புரட்சிக்கு தயாராகக் கூடிய முரடர்கள் ஆகியோரைச் சுற்றியே என் படைப்புக்கள், இதுவரை வருகின்றன.

எனது கதைகள் முற்போக்கு நிறைவுடன் அல்லது தார்மீகக் கோபத்தை எழுப்பும் அம்சத்துடன் முடியும். பெரும்பாலான கதைகள் நிஜக்கதைகள். இதனால் “சாமியாடிகள்” சிறுகதையும், “ஒரு கோட்டுக்கு வெளியே” நாவலும் என்னைச் சிக்கல்களில் சிக்க வைத்தன.