பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சு. சமுத்திரம் ☐

தங்கி எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். இவர்கள் தான் எனக்கு அம்மா அப்பா. நான் வேலையில் சேர்ந்தபோது, சித்தப்பா புற்றுநோயால் மரணம் அடைந்தார். சித்தி கிராமத்திற்கு குழந்தை குட்டிகளோடு சென்று கொஞ்ச நஞ்சமிருந்த நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்கோ, அவர்களுக்கு ஓரளவுதான் பொருளாதார ரீதியாக உதவக்கூடிய நிலை. இந்தச் சமயத்தில் ஊரில் இருந்த பங்காளிகள் என் சித்தி குடும்பத்தினரை படாதபாடு படுத்தினார்கள். நான் நினைத்திருந்தால், எனக்குச் சென்னையில் காவல் துறையிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை உள்ளே தள்ளி அடக்குவதற்கு அதிக நேரம் ஆகியிருக்காது.

அதே சமயம், ஒரு ஏழை குடும்பத்தில் படித்து சப்-இன்ஸ்பெக்டராக உயர்ந்த ஒரு வாலிபன் எப்படி தனது சொந்தக்காரர்களையே சிறையில் போடுகிறான் என்று நான் “எந்நன்றி கொன்றார்க்கும்” என்று ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதை நினைவுக்கு வந்தது. ஆகையால், என் உறவினர்களுக்கு எதிராக என்னால் செயல்பட மனம் வரவில்லை. அதேசமயம் என் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் அவர்களை அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டிருந்தேன். காட்டாற்று வெள்ளம் பாய்ந்த அந்த வேளையில், என் சித்தி அவர்களை எதிர்த்து தீரமாகப் போராடியதும், சொத்தில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருந்ததும், நெஞ்சில் நினைவுகளாக நங்கூரம் பாய்ச்சின.