பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சு. சமுத்திரம் ☐

திணிப்பு பற்றிக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற காலகட்டம், நாலு பேர் கூடிவிட்டால் போதும், உடனே அரசியல் பேச்சு. உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் கும்பலாகி விடுவார்கள். ரத்த ஆறு, இருப்பது ஒரு உயிர், அது இப்போது வேண்டுமானாலும் போகட்டும் என்ற புறநானூறு முழக்கங்களோடு, ஒசைப்படாத “அகநானூறு” நிகழ்ச்சிகளும் நடந்த காலம். கட்டிளங்காளைகள், கலைஞரின் பராசக்தி பாணியில், அதே சமயம் அரைகுறைத் தமிழில், அண்ணா பாணியில் சொல்லப்போனால் “பருவ மங்கைகளுக்கு”, காதல் கடிதங்கள் எழுதிய காலம். கண்ணே, கற்கண்டே, கற்பகமே, பெட்டகமே என்று குறைந்தது இரண்டு பக்கத்திற்காவது ஒருத்தன் கடிதம் எழுதவில்லையானால், கடிதத்திகுரிய காரிகை அவனை ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டாள். சில அண்ணன்மாருக்கு நானே கூட பல காதல் கடிதங்களை எழுதிக் கொடுத்திருக்கிறேன். இதனாலேயே சில பெண்களிடம் செல்லமான முத்துக்களையும், வலிதாள முடியாத மொத்துக்களையும் வாங்கி இருக்கிறேன்.

இப்படிப்பட்ட காலப் பின்னணியில், எங்கள் பக்கத்து ஊரில் ஒரு வாத்தியாரும், அப்போதைய பெரிய படிப்பான எட்டாம் வகுப்பைப் படித்த ஒருத்தியும் காதலித்த நேரம். இருவரும் நிலம் பார்த்து, குலம் பார்த்துக் காதலித்தால் பிரச்சினை இல்லை. இவர்களின் ஒத்திகையை அரங்கேற்ற இருவீட்டாரும் தீர்மானித்து ஊரைக் கூட்டினார்கள். ஆனால், அய்யகோ (அந்தக் கால பாணி) பெண் வீட்டுப்