பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்லூரிக் காலத்திலே...

பல்வேறு நல்லதும், கெட்டதுமான அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு, கல்லூரி காலத்திலேயே ஏற்பட்டது. அப்போது கொடிகட்டி பறந்த திராவிடக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு, சுய சிந்தனையுள்ள ஒரு மாணவ தேசியவாதியாக இருந்தேன். அன்றைய 1960-ம் ஆண்ட காலக் கட்டத்தில், “தேசிய முழக்கம்” என்ற வாரப்பத்திரிகையில் ஒரு கவிதை எழுதினேன். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரும், கல்லூரியில் என் மூத்த சகாவுமான திரு.ச. ராசமாணிக்கம் (செந்தில்நாதனின் அண்ணன்) என்னைக் “கண்டெடுத்து”, வடசென்னையில் கோவிந்தப்பன் நாயக்கன் தெருவிலுள்ள ‘தேசிய முழக்கம்’ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே, தாய்மொழி மலையாளம் ஆனாலும், தன்னைத் தமிழ்மணி என்று ஆக்கிக் கொண்ட சகாவுடனும், தெலுங்கரான பகத்சிங், பிராமணரான கரிகாலன், மற்றும் பலராமன், நேருதாசன், தர்மலிங்கம் போன்ற தேசிய தோழர்களின் நட்பு கிடைத்தது. பின்னர் நேருதாசனை ஆசிரியராகக் கொண்ட ஐக்கிய இந்தியா என்ற பத்திரிகையில், “முட்கலூர் அழகி”, என்ற முற்றுப்பெறாத சரித்திர தொடர்கதையையும், ‘சாண்டில்யன் பாணியில்’ எழுதினேன். கல்லூரி பேச்சுப் போட்டிகளில் திராவிட இயக்க மாணவர்களோடு, நட்பு குறையாமல், எனக்குக் கிடைத்த வெற்றி தோல்விகள் என்னை ஒரு சமூக சிந்தனையாளனாக மாற்றியது. இந்தப் பின்னணியில்தான் பல்வேறு கதைகளை எழுதினேன். இதற்குப் பிறகு பல்வேறு கட்டங்களில் எனக்குக் கிடைத்த தோழமை, என்னை நாடறிந்த நல்ல எழுத்தாளனாக மாற்றி விட்டது.

நண்பர் வட்டத்தில்...

பழுத்த தமிழ் அறிஞர்களும், சிறந்த இலக்கியவாதிகளுமான, பேராசிரியர் பாக்கியமுத்து, பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து ஆகியோர் நடத்திய ‘நண்பர் வட்டத்தில்’, 1988-டிசம்பர் முதல், 1993-மே வரை என் கதைகளின் கதைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், அந்தப் பத்திரிகையின் பக்க கட்டுப்பாட்டைக் கருதி, குறிப்புகளாக எழுதப்பட்டவை. அந்த நேர உணர்வுகளை, பிரதிபலிக்கும் வகையில் அவற்றை மாற்றாமல்,