பக்கம்:தம்ம பதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ☐ தம்ம பதம்

392. மூடனே! சடைத்தலையாலும் மான்தோல் ஆடையாலும் என்ன பயன்? புறத்தை நீ தூய்மை செய்கிறாய்; என் அகமோ தீமைகள் நிறைந்த காடாக இருக்கிறது. (12)

393. பிறர் கழித்து நீக்கிய வஸ்திரங்களை அணிந்து உடல் மெலிந்து, நரம்புகள் தெரியும்படி உலர்ந்து வனத்திலே ஏகாந்தமாகத் தியானம் செய்பவனையே தான் பிராமணன் என்று சொல்வேன். (13)

394. தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால் , போவாதி [1] என்று அழைக்கப்படுவான்; ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும் இல்லாமலிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (14)

395. சகலபற்றுக்களையும், சேதித்தவன், அச்சமற்றவன், உறவு பந்தங்களிலிருந்து விடுபட்டவன், (அசத்தியத்திலிருந்து) ஒதுங்கியவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (15)

396. தன்னைப்பிணித்துள்ள (துவேஷமாகிய) தோலையும், (ஆசையாகிய) வாரையும். (போலிச் சமயக் கொள்கைகளாகிய) சங்கிலியையும், (அஞ்ஞானமாகிய) குட்டையையும் அறுத்துக் கொண்டு போதியடைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (16)


  1. போவாதி-அகங்காரமுள்ளவன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/92&oldid=1360028" இலிருந்து மீள்விக்கப்பட்டது