பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. சண்டாளர்கள் சாம்பலுக்கும் பொன்னுக்கும் குறிக்கத் தகுந்த வேற்றுமை உண்டு: ஆனால் ஒரு பிராமணனுக்கும் சண்டாளனுக்கும் அத்தகைய வேற்றுமை எதுவுமில்லை. காய்ந்த கட்டையைக் கடைவதில் எழும் தீயைப்போல் பிராமணன் உண்டாக்கப் பெறவில்லை; அவன் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை, காற்றிலிருந்து தோன்றவில்லை, பூமியைத் துளைத்துக் கொண்டு மேல் வரவில்லை. சண்டாளன் எவ்வாறு தோன்றினானோ, அதுபோலவே பிராமணனும் ஒரு ஸ்திரீயின் கருப்பையிலிருந்து பெறப்பட்டவனேயாவான். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான அங்கங்களைப் பெற்றிருக்கின்றனர். எள்ளளவு வித்தியாசமும் இல்லை. அவர்களை வெவ்வேறு வர்க்கங்கள் என்று எப்படிப் பிரித்துக் கருத முடியும்? மனித குலத்திலே எத்தகைய குறிப்பிட்ட வேற்றுமையும் உள்ளது என்று கருதுவதை இயற்கை மறுத்துக் காட்டுகின்றது.

கோபமுள்ளவனும் துவேஷமுள்ளவனுமான மனிதனே சண்டாளன்; தீயவனாயும், ஏமாற்றுபவனாயும், தவறு செய்பவனாயும், கரவடம் நிறைந்தவனாயும் இருப்பவனே சண்டாளன். எவன் கோபமூட்டுபவனாயும், பேராசையுள்ளவனாயும், பாவகரமான ஆசைகளுள்ளவனாயும், பொறாமை, அயோக்கியதை, வெட்கமின்மை, பாவங்கள் செய்வதில் பயமின்மை ஆகியவற்றோடு விளங்குபவனாகவும் இருக்கின்றானோ, அவனையே சண்டாளன் என்று அறியவும் பிறப்பியால் ஒருவன் சண்டாளனாவதில்லை; பிறப்பினால் ஒருவன் பிராமணனாவதுமில்லை; செயல்களினாலேயே ஒருவன் சண்டாளனா கிறான், செயல்களினாலேயே ஒருவன் பிராமணனாகிறான். ' - * + உயிர்களுக்குத் ததாகதர் (புத்தர்) போதனை செய்கையில், பாரபட்சம் காட்டுவதேயில்லை. சூரியனும், சந்திரனும், நல்லவர் தீயவர் என்றோ, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ, மணமுள்ளவர் மணமற்றவர் என்றோ வேற்றுமை பாராமல், உலகம் முழுவதற்கும் ஒளி செய்வது போலவும், அவைகளின் கதிர்கள் பாரபட்சமின்றி எல்லாப் பொருள்களின் மீதும் பரவுதல் போலவும், ததாகதர் போதிக்கும் அறிவொளி உயிர்கள் அனைத்திற்கும் சமமாகவே வருகின்றது. 74 புத்தரின் போதனைகள்