பக்கம்:வாழ்க்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

25


நாங்கள் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் எதைச் சொன்னாலும் உடனே அதனைக் கண்முன்பு நிரூபித்துக் காட்டமுடியும். எங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளால் மனிதனுடைய துன்பம் குறைந்திருக்கிறது. ஆனால், உன் வாழ்க்கையைப் பற்றியோ, நீ நாடும் நன்மையைப் பற்றியோ, உன்னைப் பார்க்கிலும் அதிகமாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ நீ உயிரோடு இருக்கிறாய். அவ்வளவு தான்! கூடியவரை நல்ல முறையில் வாழ முயற்சி செய்!’

போலியான சமயவாதிகள், விஞ்ஞானிகள் இரு திறத்தாரிடத்திலும் சந்தேகம் நீங்கக்கூடிய விடை கிடைப்பதில்லை. எனவே மனிதன், தன் பழைய நிலைமை மாறாமல், வாழ்க்கைக்குத் தன் உணர்ச்சிகளையே வழிகாட்டியாகக் கொள்கிறான்.

காலையிலே துயிலெழுந்து இரவில் மீண்டும் துயிலச் செல்லும்வரை மனிதன் எத்தனையோ செயல்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது. நூற்றுக் கணக்கான வேலைகளில் செய்து முடிக்க வேண்டியவை எவை என்று ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு மேலே கூறிய சமயவாதிகளின் கொள்கையோ, விஞ்ஞானிகளின் கொள்கையோ வழிகாட்ட முடியவில்லை. வழிகாட்டி இல்லாமல் மனிதன் தன் செயல்களைத் தேர்ந்து கொள்வதும் கஷ்டம். ஆகவே அவன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், வெளியிலிருந்து கிடைக்கும் வேறொரு வழிகாட்டியின் உதவியை நாடுகிறான். அந்த வழிகாட்டி என்றும் இருப்பது. இன்றும் எல்லா மக்கட் சமூகங்களிலும் நிலைத்து நிற்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/32&oldid=1122048" இலிருந்து மீள்விக்கப்பட்டது