பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கார்ல் மார்க்ஸின் கருத்துப்படி, இயந்திரத் தொழில்கள் பெருகியுள்ள நாடுகளிலேதான் கம்யூனிஸ்ட் புரட்சி எளிதில் ஏற்பட முடியும். உடல் வலிமையைத் தவிர வேறு கதியில்லாத கோடிக்கணக்கான தொழிலாளர்கள் முதலாளித்துவ முறையில் அமைந்த தொழிற்சாலைகளில் கூலிக்கு வேலைசெய்து, களைத்து, நொந்துபோயிருக்கையில் புரட்சிப் படைக்கு அவர்களே மிகவும் ஏற்றவர்கள். புரட்சியால் அவர்கள் தங்களைப் பிணித்துள்ள விலங்குகளைத் தவிர வேறு எதையும் இழக்கப் போவதில்லை என்று மார்க்ஸ் கூறியுள்ளார். வீடு, நிலம், சொத்து, சுகம் ஏதாவது இருந்தால்தானே அவர்கள் கவலைப் படவேண்டும்! மேலும், அவர்களை ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒன்று சேர்த்து வைத்துப் போராட்டத்திற்கு வசதி செய்திருப்பதும் முதலாளித்துவமே. தொழிற் சங்கங்களின் மூலம் அவர்கள் ஐக்கியப்படுகிறார்கள்: வேலை நிறுத்தங்களின் மூலம் அவர்கள் தங்கள் வல்லமையை உணர்கிறார்கள். வேலை நிறுத்தங்களே அவர்களுடைய போராட்டப் பயிற்சிகள். தொழிலாளர்கள் தலைமையில், சொந்தத்தில் நிலமில்லாமல் கூலிக்காக விவசாயம் செய்யும் கோடிக்கணக்கான குடியானவர்களும் சேருவார்கள். தொழிலாளர்களைப்போல் குடியானவர்கள் அதிதீவிரப்புரட்சியாளர்களாக விளங்க மாட்டார்கள். நாட்டுப் புறங்களில் ஒதுங்கி மண்ணை உழுதுகொண்டிருக்கும் அம்மக்கள் பலவிதமான மூடநம்பிக்கைகள் கொண்டிருப்பார்கள். ஆயினும் அவர்களையும் சேர்த்துக்கொண்டு தான் புரட்சி செய்யவேண்டும் என்பதை மார்க்ஸ் வற்புறுத்தியிருக்கிறார். சீனாவில் தொழிலாளர்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் கோடிக் கணக்கான குடி யானவர்களைக் கொண்டே மாலே-துங் புரட்சியை

143