பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கொண்டிருப்பதால், நாம் திபேத்துக்கு மேற்கிலும், தெற்கிலும், காஷ்மீரிலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள மலைப் பிரதேசம் முழுவதையும் பாதுகாத்து நிற்கவேண்டியிருக்கிறது. நாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யு முன்பே, கம்யூனிஸ்ட் சீனாவின் எல்லைத் தகராறு முற்றிவிட்டது.

கம்யூனிஸ்ட் சீனாவின் நடவடிக்கைகளை நாம் கவனித்துப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டோம். திபேத்தில் சீனா படையெடுத்தது முதல் அங்கு அது செய்துவந்த ராணுவ ஏற்பாடுகளைப் பற்றி ஏராளமான செய்திகளும், தெளிவான புத்தகங்களும் வெளிவந்துள்ளன. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் அடுத்த பெரும் போராட்டம் இமாலயத்திலேயே நடைபெறுமென்று தக்க ஆதாரங்களுள்ள கட்டுரைகள் வெளிவந்துள்ளன. நம் நாட்டிலேயே இந்திய ஸோஷலிஸ்ட் கட்சி இமயமலைச் சாரலிலுள்ள பிரதேசங்களின் பரப்பு, ஜனத்தொகை, பாதுகாப்பின் அவசியம் ஆகியவைகளைப் பற்றிய நம் அரசியல் கொள்கை முதலியவைகளை 1950 முதலே விரிவாக விளக்கி எச்சரிக்கை செய்து வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாகச் சீனப் படையினர் நமது லடாக் (காஷ்மீர்) பகுதியில் 12,000 சதுர மைல் அளவுள்ள நிலப்பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிக்கொண்டு வந்தனர். இத்தனைக்கும் நாம் விழித்துக் கொள்ளவில்லை !

சீனப் படையினர் வந்து நேரிலே தாக்கிய பிறகு தான், நம்மைத்தான் தாக்குகின்றனர் என்பதையும், தாக்குவது சீனர்கள்தாம் என்பதையும் நாம் நம்பினாேம்! அதுமுதல், மலைக் குகையில் உறங்கிக் கொண் டிருந்த சிங்கம் எழுந்து பிடரி மயிரை உலுப்பிக் கொண்டு முழங்குவதுபோல், இந்திய நாடு முழுதுமே போர்க்கோலம் பூண்டு வந்தது. உடனேயே பிரிவினைச்

83