பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யும் தாங்காமல் நலிந்து வந்தார்கள் . ஹோ - குன் என்ற பிரதம மந்திரி ஒருவர், இருபது ஆண்டுக்காலம் பதவிவகித்ததில், பன்னிரண்டு கோடிப் பவுன் லஞ்சம் வாங்கிச் சேர்த்து வைத்திருந்தாராம் ! அரசாங்கத்தின் வருட வருமானம் சுமார் பத்தாயிரம் பவுன் தான், ஆனால் அமைச்சரின் சொத்து மட்டுமே பன்னிரண்டு கோடி !

மக்களிடையே வெறுப்பும், எதிர்ப்பு உணர்ச்சியும் வளர்ந்து, புரட்சியும், கலகமும் நடந்துகொண்டிருந்தன. 1793 முதல் எட்டு வருடங்கள் நடந்த புரட்சி ஒருவாறு மிகக் கொடுமையாக அடக்கப்பெற்றது. இடையில் சீனாவில் குடிபுகுந்திருந்த ஐரோப்பியர், அதுவே தக்க சமயமென்று கண்டு, போர் தொடுத்தனர். 1840-இல் பிரிட்டன் தன் அபினி வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக ஒரு சண்டை நடத்தியது. அப்பொழுது ஆண்டுவந்த சக்கரவர்த்தி டாவோ - குவாங் தோல்வியுற்றார். இத்தோல்வி காரணமாக குவாங்செள, அமாய், பூசெள, கிங்போ, ஷாங்கை ஆகிய ஐந்து துறைமுகங்களும், நஷ்ட ஈட்டுப் பொருள்களும் ஆங்கிலேயருக்கு அளிக்கப்பெற்றன. உள்நாட்டில் சில இடங்களில் அவர்களுக்கு அரசாங்கத்திற்குரிய அதிகாரங்களும் வழங்கப் பெற்றன. 1860-இல் ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து பீகிங் தலைநகரைத் தாக்கி, அதைச் சூறையாடியதுடன், உடன்படிக்கை செய்து கொண்டு, புதிதாக மேலும் துறைமுகங்களையும் பெற்றுக்கொண்டனர். ஆசிய நாடுகளில் முதன் முதலாக ஐரோப்பியரைப் பின்பற்றி இயந்திரத் தொழில்களை அமைத்து, புதிய வல்லரசாக வளர்ந்து வந்த ஜப்பானும் 1895-இல் படையெடுத்து வந்து வெற்றி கொண்டது. அதன் பயனாக அது ஃபர்மோஸா தீவையும், சில துறைமுகங்களின் உரிமையையும்,

122