பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சத்துடன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆசையைக் காட்டுவதும், ஆவேச முண்டாக்குவதும், அரசாங்க வல்லமையால் கட்டாயப்படுத்தி வேலை செய்யத் துாண்டுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைகள்.

மார்க்ஸூம் மாஸே-துங்கும்

கம்யூனிஸ்ட் புரட்சியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ரஷ்யா பின் தங்கிய நாடாக இருந்த போதிலும், அங்கு ஜார் சக்கரவர்த்தி காலத்திலேயே இயந்திரத் தொழில்கள் சில இருந்தன. முதல் உலகப் போரின் இறுதியில், படைவலி குறைந்து, ஆட்சி தளர்ச்சியுற்று வருகையில், லெனின் தலைமையில் புரட்சி தோன்றிற்று. 1917-இல் நேரடியாகப் புரட்சி செய்து முடியாட்சியைக் கவிழ்த்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரத்தை அங்கே அமைக்க முடிந்தது. சீனாவிலோ, ஷாங்கை போன்ற இரண்டோரிடங்களைத் தவிர, நாடெங்கிலும் பெருந்தொழில் எதுவுமில்லை. எனவே கம்யூனிஸ்ட் புரட்சிக்கு ஆதாரமாக விளங்க வேண்டிய ஆலைத் தொழில்கள் அதிகமாயில்லை. 1911 -இலேயே தேசியப் புரட்சியில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தேசிய அரசாங்கத்தையும், மாகாணங்களில் பெரும்படைகளுடன் விளங்கிய பிரபுக்களையும் எதிர்த்தே போராட வேண்டியிருந்தது. ரஷ்யப் புரட்சிக்குப் பின் 30 ஆண்டுகள் கழித்தே சீனப் புரட்சி ஏற்பட்டது. அந்த இடைக்காலத்தில் ரஷ்யாவில் அபரிமிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சீனா கோடிக் கணக்கான மக்களின் உடல் வலிமையைத் தவிர வேறு கருவிகள் எதுவுமில்லாமல் இருந்தது. ஆனால் அந்த மக்களின் வலிமையோ ரஷ்யர்களைவிட நான்கு மடங்கு கூடுதலாக இருந்தது.

142