பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பவர்கள் லியு ஷெள-சியும், சூ என்-லாயும். நாற்பது ஆண்டு கட்கு மேலாக இவர்களும் மற்றும் பல தலைவர்களும், பல போராட்டங்கள் புரிந்து, பல இயக்கங்கள் நடத்தி, லட்சக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து, கட்சி வெற்றி பெறச் செய்தார்கள். போர், போராட்டம், உதிரப் பெருக்கு, இயக்கம், எதிர்ப்பு, பிரசாரம், சமாதானம், ஒத்துழைப்பு முதலியவையெல்லாம் இவர்கள் நாள்தோறும் பழகியவை. இவர்களுடைய முதல் நோக்கம் சீனா முழுவதிலும் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவி நிலை நிறுத்துவது. அதில் பூரண வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

மாஸே-துங்கும் தோழர்களும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர்கள். அதாவது கார்ல் மார்க்ஸின் தத்துவங்களையும், அத்தத்துவங்களைக் காலத்திற்கும் நாட்டிற்கும் ஏற்ற முறையில் நிறைவேற்றிக் காட்டிய லெனினுடைய விளக்கங்களையும் நன்றாகக் கற்றவர்கள். லெனினுக்கு அடுத்தாற்போல் ரஷ்ய சர்வாதிகாரியாயிருந்து 1953-இல் காலமான ஸ்டாலினுக்குப் பின்னல், இப்போது கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு விளக்கம் கேட்க வேண்டுமானல், சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டு மென்ற அளவுக்கு இவர்கள் கொள்கைப் பிடிப்புடையவர்கள். ஆயினும் தத்துவவாதிகளான மாஸே-துங்கும் அவருடைய தோழர்களும் தலைசிறந்த காரிய வாதிகள், செயல் திறன் படைத்தவர்கள். இனிய பேச்சினால் அவர்களை ஏமாற்ற முடியாது. பன்முறை சிந்திக்காமல் அவர்கள் ஒரு முடிவுக்கு வருவதில்லை. அவர்கள் எதிலும் வினைத்திட்ப முடையவர்கள், வினைத் திட்பம் என்பது அவர்கள் மனத் திட்பமே. அவர்கள் குடியரசு நிறுவிய நாள் முதலே இந்த உறுதியை உலகம் கண்டு வருகின்றது.

139