பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பாண்டுங்கில் நடந்த ஆசிய ஆப்பிரிக நாடுகளின் மகாநாட்டில் மற்ற நாடுகளுடன் சமாதான சகவாழ்வுக் கொள்கையைச் சீனா ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் பின்னால் சீனாவின் செயல்களைப் பார்த்தால், அது சமாதானத்தையும் விரும்பவில்லை. சகவாழ்வையும் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏதோ காலங்கருதிக் காத்திருப்பதற்கே அது சமாதானக் கொள்கையை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டது. இப்பொழுது நாள்தோறும் சீனா ரஷ்யாவிடம் தனக்குள்ள வெறுப்பை வெளிப்படையாகவே காட்டிவருகின்றது. ஆசிய, ஆப்பிரிக நாடுகளின் மகா நாடுகளுக்கு ரஷ்யாவுக்கு அழைப்பே அனுப்பக்கூடாதென்று தடுக்கும் அளவுக்குச் சீனா முனைந்துவிட்டது ! எந்த நாட்டுக்கும் ரஷ்யா உதவி செய்து வந்தால், சீனா அந்நாட்டின் எதிரியுடன் குலாவி, அவனுக்கு உதவி செய்து துாண்டிவிடுகின்றது.

சமாதானக் கொள்கையுடன் சீனா ஒதுங்கியிருந்தாலும், ஆசிய நாடுகளில் அமைதியான முறையில் கம்யூனிஸம் பரவுவதற்கு உழைத்துவர முடியும். ‘ஸோஷலிஸம் அமைதியான முறையிலும், சட்டசபைகளின் மூலமும்கூட ஏற்படமுடியும்’ என்று குருஷ் சேவும் மற்ற ரஷ்யத்தலைவர்களும் இருபதாவது ரஷ்யக் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில் பேசினார்கள். அந்த முறையைச் சீனா ஏற்றுக்கொண்டு நடக்குமா ?

சீனாவின் நோக்கங்கள் பல இன்னும் பூர்த்தியாகாமலிருக்கின்றன. வடகொரியா, தென்கொரியா இரண்டையும் ஒன்று சேர்த்துக் கொரியாவை அது தன் அதிகாரத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

வியட்னாம் இரு பிரிவுகளாயிருப்பதையும் கம்யூனிஸ்ட் ஆதிக்கியத்தில் ஒன்றாகச் சேர்க்கவேண்டும்.

202