பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கமிட்டியில் பெரும்பான்மையான உறுப்பினர் தன் சொற்படி ஆடக்கூடிய நிலையிலும், கமிட்டி தன்னை மீறிச் செல்லாத நிலையிலும் சீனா கவனித்துக் கொண்டது .

தலை நகரிலும் நாடெங்கிலும் கொந்தளிப்பாக இருந்தது. சீனாவின் வஞ்சகச் செயல்களையும், கொடுமைகளையும், பலவிதமான கொள்ளைகளையும் மக்கள் வெறுத்தனர். பஞ்சமும் நோயும் ஒரு புறம், பயமும் அடக்கு முறைகளும் ஒரு புறம். தலாய் லாமா சீனாவிலிருந்து திரும்பி வந்த சமயம் அவர் கண்ட காட்சிகள் இவைதாம். கம்யூனிஸ்ட் ஆட்சியில் சீனாவிலே சரித்திரப் புகழ்பெற்ற பெரும்பாலான பெளத்த மடங்கள் பாழடைந்து கிடப்பதையும், மடங்களைச் சேர்ந்த சில வயோதிகப் பிட்சுக்களையும் சர்க்கார் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதையும், துறவிகளிடையிலும் கம்யூனிஸ்டுகள் ஊடுருவி நின்று தங்கள் பிரசாரத்தை நடத்துவதையும் கண்டிருந்த தலாய் லாமா, தம் நாட்டிலும் என்னென்ன நேருமோ என்ற கவலையுடன், ஒவ்வோர் இடமாகப் பார்த்துக் கொண்டே லாஸா வந்து சேர்ந்தார்.

1955, ஆகஸ்ட் மாதம் அவர் மக்களுக்குச் சில சொற்பொழிவுகள் செய்தார். அவற்றிலிருந்து நாட்டில் நிலவிய நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளலாம். அவற்றில் ஒன்றின் சுருக்கம் வருமாறு :


‘சமயமும் அரசியல் வாழ்க்கையும் சேர்ந்து இணைந்துள்ள நாடு திபேத்து. நம் வாழ்க்கையே அந்த இணைப்பைப் பொறுத்தது. சமயமில்லாவிடில் நம் அரசியல் வாழ்க்கை நடைபெறாது. அரசியல் வாழ்க்கையில்லாமல் நம் சமயமும் தனித்திருக்க முடியாது. திபேத்தின் சரித்திரத்தைப் பார்த்தாலே இது தெரியும்.

227