பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இறுமாப்புள்ள இளவரசி


மூன்று இடங்களைத் தோண்டிப் பார்த்தான். அவன் தோண்டிய இடங்களிலிருந்து வேறு பிணங்கள் எழுந்துவிட்டன! அன்றிரவு அவன் கண்ட காட்சிகளுள் அவையே மிகவும் கோரமானவை. அவன் குழிகளில் மீண்டும் மண்ணைக் கொட்டி மூடிவிட்டு இடுகாட்டை விட்டே வெளியேறினான்.

"அடுத்த ஊர் கார்ரிக்" என்றது, பிரேதம்.

காத்தான் தன் தலைவிதியை நொந்துகொண்டே நடந்தான். கிழவன் சொன்ன கார்ரிக் முதலிய மூன்று ஊர்களிலும் இடம் கிடைக்கவில்லை. கால்கள் தள்ளாடிக் கொண்டே ஐந்தாவது ஊராகிய கில்- பிரீடியாவை அடைந்தான், காத்தான்.

அங்கே இடுகாட்டில் புதுக் குழி ஒன்று தயாராகவேயிருந்தது. அதனுள்ளே ஒரு சவப்பெட்டியும் இருந்தது. காத்தான் அப்பெட்டியின் மூடியைக் கையிலே எடுத்தான். பெட்டி காலியாகக் காணப்பட்டது. அந்தக் கணத்திலேயே அவன் முதுகிலிருந்த பிணம் துள்ளியெழுந்து அப்பெட்டிக்குள் விழுந்தது. உடனே அவன் பெட்டியை மூடிக் குழியில் மண்ணைக் கொட்டி நிரப்பிவிட்டு வெளியேறினான்.

அப்பொழுது கீழ்வானத்திலே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். காத்தான் சாலைக்குச் சென்று அருகில் ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்தான். கடைசியாக ஒரு சத்திரத்தைக் கண்டுபிடித்து, அதனுள்ளே சென்று, நீட்டி நிமிர்ந்து படுத்துவிட்டான். இரவுவரை ஒரே தூக்கந்தான். இரவில் விழித்ததும், சிறிது உணவெடுத்துக் கொண்டு, மீண்டும் துயில் கொண்டுவிட்டான். மறுநாள் காலையில் எழுந்தவுடன், ஒரு குதிரையை வாடகைக்கு வாங்கிக்கொண்டு, அவன் அதில் ஏறி வீட்டுக்குத் திரும்பிச் சென்றான். அவன் பிரயாணம் செய்த தூரம் இருபத்தாறு மைல் ஒரு நாளைக்கு முன்னால் இந்த இருபத்தாறு மைல் துரமும் அவன் முதுகிலே பிணத்தைத் தாங்கிக்கொண்டு எட்டு மணி நேரத்தில் நடந்திருப்பதை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான்.

வீட்டிலே அவன் மற்றவர்களிடம் எதுவும் சொல்லவில்லை; தன் தந்தையிடத்தில் மட்டும் நடந்ததைத் தெரிவித்தான்.