பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எசமானனும் வேலைக்காரனும்

15



தெரியாமற்போய்விடும். ஏனென்றால், நாள்பட்ட மது ஊமைப் பூனையைக்கூடப் பேச வைக்கும்; ஆனால், பேசும் மனிதனை ஊமையாக்கிவிடும் !" என்று அவனுக்கு எச்சரிக்கை செய்தான்.

பிறகு, அவன் ஏதோ பொருள் விளங்காத மந்திரச் சொற்களை 'மளமள' வென்று உச்சரித்தான். உடனே, தானியேலும் அவ்வாறே சொன்னான். மாளிகைக் கதவில் திறவுகோலுக்காக அமைந்த துவாரத்தின் வழியாக இருவரும் உள்ளே நுழைந்து சென்றனர். உள்ளேயிருந்த பல கதவுகளிலும் அவர்கள் அவ்வாறே நுழைந்து பாய்ந்தனர். கடைசியாக, ஒரு பெரிய கூடத்தை அடைந்தனர். அங்கே பல வகை மதுப்புட்டிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன. குள்ளன் ஒவ்வொரு புட்டியாக எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். தானியேலும் சிறிதும் சளைக்காமல், அவனைப் பின்பற்றிப் புட்டிபுட்டியாகக் காலி செய்தான். "உலகிலேயே தலைசிறந்த எசமானர் நீங்கள்தாம்! உங்களுக்கு ஈடும் கிடையாது, எடுப்பும் கிடையாது ! குடிப்பதற்கு இப்படி மது வகைகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால், நான் உங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பேன்ǃ” என்று கூறி, அவன் குள்ளனைப் போற்றிப் புகழ்ந்தான்.

“நான் உன்னிடத்தில் கபடமில்லாமல் தெளிவாகச் சொன்னபடி நீ வேலை செய்துவந்தால் தக்க பயன் கிடைக்கும். சரி, நேரமாகிவிட்டது! என்னுடன் கிளம்பி வா!" என்றான், குள்ளன்.

அவர்கள் மீண்டும் பல கதவுகளின் துவாரங்களின் வழியாக நுழைந்து வெளிவந்தார்கள். வெளியிலே வைத்திருந்த தங்கள் நாணல்களிலே ஏறிக்கொண்டு, அவர்கள் ”பொர்ரம்ǃ பொர்ரம் !" என்று கூவியவுடன், இரண்டு குதிரைகளும் தோன்றி, வாயுவேகத்தில் பாயத் தொடங்கின. அந்த வேகத்தில் மேகங்களெல்லாம் பனிப் பந்துகளைப் போலச் சிதறி ஓடின.

அவர்கள் மீண்டும் கோட்டை மைதானத்தை அடைந்ததும் குள்ளன் தானியேலை வீட்டுக்கு அனுப்பி விட்டான். மறுநாள் அதே நேரத்தில் அதே இடத்திற்கு வந்து சந்திக்க வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.