பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இறுமாப்புள்ள இளவரசி



இவ்வாறு அவர்கள் ஒவ்வோர் இரவிலும் ஒவ்வொரு திசைக்குச் சென்று வந்தனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லாத் திசைகளிலும் சென்று, அயர்லாந்திலுள்ள மதுக்கிடங்குகள் அனைத்தையும் அவர்கள் பார்த்து முடித்துவிட்டனர். எங்கு என்ன வகை மது உண்டென்பதை அவர்களைப் போல வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் உருசி பார்க்கவேண்டிய மதுவே பாக்கியில்லை எனலாம்.

ஒரு நாள் இரவில் தானியேல், கோட்டை மைதானத்தில் குள்ளனைக் கண்ட பொழுது, வழக்கம் போல் நாணல்கள் பறித்து வரப் புறப்பட்டான். அப்பெழுது குள்ளன், "தானியேல், இன்று கூடுதலாக ஒரு குதிரை இருந்தால் நலம் திரும்பி வரும் பொழுது நம்முடன் வேறோர் ஆளும் வரக்கூடும் !" என்றான். தானியேல் ‘ஏன்? எதற்கு?’ என்று கேள்விகள் கேட்பதை முன்பே விட்டுவிட்டான். குள்ளன் சொல்வதைச் செய்வதே தன் கடனென்று அவன் எண்ணினான். சதுப்பு நிலத்திற்குப் போகும்பொழுது அவனாகச் சிந்தனை செய்து பார்த்தான். “ஒருவேளை, எசமானன் கூடுதலாக மற்றொரு வேலையாளைச் சேர்த்துவரக்கூடுமென்று அவன் எண்ணினான். அப்படி ஒருவன் வந்து சேர்ந்தால், அவன் என் கையாளாக இருப்பான். ஒவ்வொரு நாளும் நானே போய்க் குதிரைகள் தயாரிக்கும் வேலையை இனி அவன் செய்வான். நானும் ஒரு கனவான்தானே முதலாளியைவிட நான் எதிலே குறைந்தவன்” என்றும் அவன் எண்ணமிட்டான்.

அவர்கள் இருவரும் குதிரைகள்மீது ஏறிக்கொண்டு புறப்பட்டனர். மூன்றாவது குதிரையின் கயிற்றையும் தானியேல் பற்றிக்கொண்டிருந்தான். இருவரும் வழியில் எங்கும் நிற்கவேயில்லை. லிமெரிக் தாலுகாவில் ஒரு குடியானவனுடைய வசதியான பெரிய வீட்டின் முன்பு சென்ற பிறகுதான் அவர்கள் குதிரைகளை நிறுத்தினார்கள். வீட்டினுள்ளே பலர் கூடிக் கும்மாளமடித்துக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இடையிடையே வாத்தியங்களின் இசையும் ஒலித்தது. குள்ளன் சிறிது நேரம் செவி கொடுத்து உள்ளே நடப்பதைக் கவனித்துவிட்டு, திடீரென்று தன்