பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

இறுமாப்புள்ள இளவரசி


நடப்பவைகளைக் கவனிக்க முடியும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்தனர். குள்ளன், ஒரு கிளையிலே குந்துவது போலத் தன் உடலையெல்லாம் சுருட்டி மடக்கிக்கொண்டு வசதியாக இருந்தான். ஆனால், தானியேலுக்கு இது வழக்கமில்லை. கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு, ஒரு கட்டையிலே உட்கார்ந்திருப்பதில் அவன் மிகவும் அவதிப்பட்டான். கூடத்திலே நடந்த வேடிக்கைகளை அவர்கள் கவனித்தனர். ஒரு பக்கத்திலே மேளகாரர், அவர்களுக்கு அருகிலே பாதிரியார், இரைலீயின் தந்தை, மணமகன் உரேனேயின் இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நின்றுகொண்டிருந்தனர். மற்றொரு பக்கத்திலே உரேனேயின் தந்தையும் தாயும், தாயின் சகோதரிகள் நால்வரும், சகோதரர்கள் மூவரும் உயர்ந்த ஆடைகளணிந்து மிடுக்குடன் நின்றுகொண்டிருந்தனர். மற்றும், மாமன்மார்கள், மாமியர்கள் முதலிய பலரும் உற்சாகமாகச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். மேசைகளிலே பரிமாறப் பெற்றிருந்த உணவு வகைகளைப் பார்த்தால் வந்திருந்த விருந்தினர்களைப் போல இருமடங்குப் பேர்களுக்குப் போதுமானவை என்று தோன்றும். எல்லோரும் மேசைகளைச் சுற்றி நாற்காலிகளில் வந்து அமர்ந்தார்கள். மணமகனின் அன்னை திருமதி உரூனே எழுந்திருந்து, முதன் முதலாகப் பாதிரியாருடைய தட்டில் ஒரு பணியாரத்தை எடுத்து வைத்தாள். மங்கலமான அந்த வேளையில், சகுனத் தடை போல மனப்பெண் ஒரு தும்மல் தும்மினாள். அந்த மேசையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டுப்போயினர். ஆனால், ஒருவர்கூட அப்பொழுது 'கடவுள் நம்மைக் காப்பாராக!' என்று சொல்லவில்லை. எல்லோரும் பாதிரியாரே சொல்லியிருப்பாரென்று எண்ணியிருந்தனர். ஆனால், அவரோ பணியாரத்திலேயே கவனமாயிருந்ததால், அச்சொற்கள் அவர் தொண்டையிலிருந்து வெளிவரவில்லை. ஒரு கணத்திற்குப் பின், ஆண்டவனின் அருளை வேண்டிக் கொள்ளாமலே, விருந்து தொடங்கிவிட்டது. உயரே அந்தரத்தில் அமர்ந்திருந்த தானியேலும் அவனுடைய கூட்டாளியும் கீழே நடந்ததைக் கவனிக்காமல்