பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இறுமாப்புள்ள இளவரசி


நிறமாகவும், மிகவும் வயதானவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் எதைத் தூக்கி வந்தார்கள் என்பது தெரியவில்லை. அவன் மீண்டும் உற்று நோக்கினான். அதற்குள் அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி வளையமிட்டுக்கொண்டனர். அவர்கள் சுமந்துகொண்டு வந்த பொருளைச் சாலையிலே போட்டார்கள். அவன் மறுபடி அதைப் பார்த்து, அது ஒரு பிணம் என்று தெரிந்து கொண்டான்.

கிழட்டுக் குள்ளன் ஒருவன் அவனிடம் நெருங்கி வந்து, "என்ன, காத்தான்! உன்னை நாங்கள் சந்தித்தது பெரிய அதிர்ஷ்டமல்லவா?” என்று கீச்சுக் குரலில் கேட்டான். அந்தக் கணத்திலேயே காத்தானுடைய உடல் சில்லிட்டுப் போயிற்று, நரம்புகளில் உதிரம் உறைந்து போய்விட்டது.

ஏழைக் காத்தான் வாயைத் திறக்க முடியாமல் திணறினான்; அவன் வாயும் இறுக்கமாக மூடியிருந்தது. ஆகவே, அவன் பதில் சொல்ல முடியவில்லை.

"ஏ காத்தான் ! நாங்கள் சரியான சமயத்தில்தானே உன்னைச் சந்தித்திருக்கிறோம்?” என்று கிழவன் மீண்டும் கேட்டான்.

காத்தான் வாயைத் திறக்கவில்லை.

“என்ன, காத்தான் மூன்றாவது தடவையாகக் கேட்கிறேன்: நாங்கள் சரியான சமயத்தில் உன்னைச் சந்தித்தது அதிர்ஷ்டந்தானே?”

காத்தான் இதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். மேலும், அவன் நாக்கு வாயின் மேல் முகட்டில் ஒட்டிக்கொண்டு அசையவே மறுத்தது.

குள்ளக்கிழவன் மகிழ்ச்சியடைந்து தன் நண்பர்களைப் பார்த்து, "காத்தானோ பதிலே பேசவில்லை. இனி நாம் அவனை நம் விருப்பம் போல் பயன்படுத்திக்கொள்ளலாம்!" என்று சொன்னான். அவன் காத்தானை நோக்கி, "காத்தான், நீ தீயொழுக்கமுள்ளவன். உன்னை நாங்கள் இப்பொழுது அடிமையாக்கிக்கொள்வோம். உன்னால் எங்களை எதிர்த்து நிற்கவும் முடியாது! இதோ இந்தப் பிணத்தைத் தூக்கு!" என்றான்.

காத்தான் நடுங்கிப்போயிருந்த நிலையில், "முடியாது!" என்று ஒரே வார்த்தை கூறினான். அவனுடைய பழைய செருக்கும் உறுதியும் அந்த ஒரு சொல்லில் வெளிப்பட்டன.