பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இறுமாப்புள்ள இளவரசி


 களைகளை ஒரு கூடையிலும் எடுத்து வைத்தாள். அரசனின் வேலையாள்கள் அவைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப் பெற்றனர். அவள் குதிரைமீது ஏறி அரசனுக்கு முன்புறம் அமர்ந்துகொண்டாள்.

போகும் வழியிலெல்லாம் அரசனுக்கு ஒரு கவலைமட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்த அவனுடைய மாற்றாந்தாய் அவன் ஒரு பெண்ணை அழைத்துச் செல்வதை ஏற்றுக் கொள்வாளா என்பதுதான் அந்தக் கவலைக்குக் காரணம். ஆயினும், அங்கு அவனே எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்ததால் அரண்மனையை அடைந்ததும், திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தான். பிஷப்பு வரவழைக்கப் பெற்றார். இளவரசிக்குப் புத்தாடைகளும் அணியிழைகளும் தயாரிக்கப்பெற்றன. விவாகம் விமரிசையாக நடந்தேறியது: மணமகள் வாய்மொழியாகச் சொல்ல வேண்டியவைகளைச் சாடைகள்மூலம் தெரிவித்துக்கொண்டாள். அவள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்பதை அரசன் அவளுடைய நடை, உடை, பாவனைகளிலிருந்து எளிதில் தெரிந்துகொண்டான். அவ்விருவரையும் போல ஒத்த மனமும் அன்பும் கொண்டிருந்தவர்களைக் காண்பதரிது.

இளவரசி வந்ததுமுதல், தீய சிந்தை கொண்ட மாற்றாந்தாய் கேடு விளைக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசி வனத்திலே எவனோ ஒரு வேடனின் மகளென்று அவள் கதை கட்டிவிட்டாள். ஆனால், அரசன் ஏமாறவில்லை. நாளடைவில் இளவரசி கருவுற்று, அழகிய ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை பிறந்ததிலிருந்து அரசன் எல்லையற்ற ஆனந்தமடைந்தான். அக்குழந்தையைத் தொட்டிலிலிட்டதும், அதற்குப் பெயர் சூட்டியதும் போன்ற வைபவங்களெல்லாம் மாற்றாந்தாய்க்கு வயிற்றெரிச்சலை அதிகமாக்கிவிட்டன. அவள் பாலில் ஒருவகை மதுவை ஊற்றி, இளவரசிக்குக் கொடுத்து அவளை நன்றாகத் தூங்க வைத்தாள். குழந்தையை எப்படித் தொலைக்கலாமென்று அவள் பல வகையாக நினைத்து நினைத்துப் பார்த்தாள். அந்த நேரத்தில், வெளியிலே தோட்டத்தில் ஒர் ஒநாய் கடைவாயை நக்கிக்கொண்டு, அவளையே பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருப்பதை அவள் கண்டாள். அப்பொழுது இளவரசி தன் செல்லக் கருவூலமான குழந்தையைக்