பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதிரியாரின்ஆன்மா

49




'அவரை எங்களுக்குக் காட்டுங்கள், உங்கள் ஆண்டவரை எங்களுக்குக் காட்டுங்கள் "

மிகுந்த மனவேதனையுடன் ஒலமிட்டுக்கொண்டே அவர் அங்கிருந்து வெளியே ஒடிவிட்டார். ஆண்டவனை நம்பும் ஒருவருடைய உதவி தமக்கு உடனே கிடைக்கா விட்டால் தமது ஆன்மா நிரையத்துள் அழுந்த வேண்டி யிருக்குமே என்று அவர் கவலைப்பட்டார்.


வீட்டினுள்ளே சென்று அவர் தம் மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். அவள், "உங்கள் கொள்கைதான் என் கொள்கை. நீங்கள் சொல்லியதையே நான் நம்பிக் கொண்டிருப்பவள். இந்த உலகிலும் சுவர்க்க லோகத்திலும் எல்லாவற்றிலும் உயர்ந்தவர் கணவரே என்பதுதான் என் நம்பிக்கை " என்று மறுமொழி கூறினாள்.


அந்த நிலையில் அவருடைய நம்பிக்கையெல்லாம் சிதறுண்டு போயிற்று. அவர் வீட்டை விட்டு வெளியே ஒடி, வழியிலே போவோர் வருவோரையெல்லாம் கேள்வி கேட்கத் தொடங்கினார். எல்லோரும் அவர் முன்பு சொல்லிக்கொடுத்த பாடத்தையே ஒப்பித்தனர்.


பயத்தால் அவர் அரைப் பயித்தியமாகிவிட்டார். நேரம் கழிந்துகொண்டேயிருந்தது. அவருடைய முடிவு காலமும் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவர் ஏக்கத்தோடு, வழியிலே ஒர் ஒதுக்குப்புறத்தில், தரையிலே விழுந்து, அழுது, கதறி, முனகிக்கொண்டிருந்தார்.


அந்த நேரத்தில் இளஞ்சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவரைப் பார்த்ததும், அவன், "ஆண்டவன் உங்களுக்கு அருள்புரிவாராக " என்றான்.

பாதிரியார் துள்ளியெழுந்தார்.

"நீ கடவுள் இருக்கிறாரென்று நம்புகிறாயா?" என்று அவர் கேட்டார்.

"அவரைப்பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளத்தான் நான் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்திருக்கிறேன். இந்தப் பக்கத்திலேயுள்ள பள்ளிகளுள் சிறந்த பள்ளி ஒன்று எங்கே இருக்கிறதென்று தாங்கள் தயவுசெய்து தெரிவிக்க முடியுமா?” என்று கேட்டான், சிறுவன்.


"சிறந்த பள்ளியும் சிறந்த ஆசிரியரும் வெகு தொலைவில்லை - அருகிலேயே கண்டுகொள்ளலாம் !" என்று