பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறுமாப்புள்ள இளவரசி

72



அவள் நின்றுகொண்டிருந்த கட்டைகளின் ஒரு மூலையிலே தீயைப் பற்றவைத்துவிட்டான். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டு நின்றனர். கண் மூடித் திறப்பதற்குள் எங்கிருந்தோ பன்னிரண்டு காட்டுவாத்துகள் அங்கே பறந்து வந்து, கட்டைகளைச் சுற்றி நின்றுகொண்டன. உடனே இளவரசி, கையிலிருந்த பன்னிரண்டு சட்டைகளையும் ஒவ்வொரு வாத்தின்மீது ஒன்றாக வீசியெறிந்தாள். மறு விநாடியில் வாத்துகள் நின்ற இடங்களில் பன்னிரண்டு வீர இளைஞர்கள் எழுந்து நின்றனர்! சிலர் மேலே ஏறிச் சென்று, தங்கள் சகோதரியின் உடல்மீது சுற்றியிருந்த கட்டுகளை அவிழ்த்தனர். அப்பொழுது அவர்களுள் மூத்தவன் ஒரு கட்டையைத் தூக்கி அவசரமாகத் தீ வைத்தவன் மண்டையிலே ஓங்கி அடித்தான். அந்தக் கொலையாளிக்கு இரண்டாவது அடியிலேயே சுரணையில்லாமற் போய்விட்டது. அவன் அப்படியே சுருண்டு விட்டான்.

சகோதரர்கள் இளைய இராணியைத் தேற்றிக் கொண்டிருக்கையில், அரசனும் அங்கே விரைந்து வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அழகிய உருவத்தோடு ஒரு மாதரசியும் அங்கே வந்தாள்; அவள் ஒரு கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் அந்த நாட்டின் இளவரசனைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தாள். ஆனந்தத்தால் எல்லோரும் கண்ணீர் பெருக்கினர்; களித்துச் சிரித்தனர்; ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு முத்தமிட்டனர். ஒநாயாக வந்து இரண்டு குழந்தைகளையும் கெளவிக்கொண்டு போய் அவைகளைக் காப்பாற்றி வைத்திருந்து, திரும்பக் கொண்டுவந்து சேர்த்த வன தேவதைக்கு நன்றி சொல்லக்கூட நேரமில்லை; அந்த மாதரசி ஒரு நொடியில் மாயமாய் மறைந்துவிட்டாள். அன்று அரண்மனையே இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது எனலாம். இதுவரை உலகிலே தோன்றிய எந்த அரண்மனையிலும் அத்தகைய ஆனந்தத் தாண்டவத்தை யாரும் கண்டிருக்க முடியாது.