பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தான் சுமந்த பிணம்

59


செய்தார்கள். அத்துடன் அவர்கள் பின்னால் இருந்து கொண்டு அவனைக் கைகளால் குத்தியும், கால்களால் எற்றியும், "ஒடு, ஒடு! " என்று விரட்டினார்கள்.

செக்கின் உலக்கை போல் கனமாயிருந்த சடலத்தை தாங்க முடியாமற் சுமந்துகொண்டே, அவர்கள் காட்டிய திசையை நோக்கிக் காத்தான் நடக்கலானான். அவனுக்கு அந்த ஊர்களும் தெரியாது, பாதையும் தெரியாது. எப்படியோ நிலவின் ஒளியைத் துணைக்கொண்டு அவன் நடந்து சென்றான். சந்திரனை மேகங்கள் மறைத்தபொழுது அவன் இருளிலே சில இடங்களில் தடுக்கி விழுந்து காயமடைந்தான். ஆனால், கீழே விழுந்த அவன், உடனே எழுந்திருந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான். அவனுக்குப் பின்னால் சிறிது தூரத்தில் குள்ளர்களும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். வழியெல்லாம் அவர்களுடைய கூத்தும் கும்மாளமும் பேச்சும் பிதற்றலும் எல்லைமீறியிருந்தன.

நெடுந்துாரம் நடந்து காத்தான் கடைசியாக டீம்போல்டெமஸ் என்ற இடத்திலிருந்த மாதா கோயிலை அடைந்தான். அங்கே கோயிலுக்குப் பின்புறமுள்ள இடுகாட்டிற்குப் போனான். வழியில் ஒரு திட்டிக் கதவு இருந்தது. அது பூட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, அவன் சிறிது திகைத்து நின்றான். அப்பொழுது "போ, சாவியை எடுத்து வா! கோயிலுக்குள் போய்ச் சாவியை எடுத்து வா !” என்று ஒரு குரல் ஒலித்தது. அவன் வியப்படைந்தான், சுற்றிச் சுற்றிப் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அவன் மெய் நடுங்கி, நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. "இது என்னது? என்னிடம் பேசியவர் யார்?" என்று அவன் கூவினான்.

"நான்தான், பிணம் பேசினேன் ' என்று குரல் ஒலித்தது.

"உன்னால் பேசவும் முடியுமா?" என்று கேட்டான், காத்தான்.

"சில சமயங்களில்..." என்றது, சடலம்.

"பிணத்திலும் பிணம், பேசும் பிணமாக வந்து அமைந்ததே!"என்று அவன் மேலும் நடுக்கமடைந்து, சாவியை எடுத்துவந்து, பூட்டைத் திறந்து, வேகமாக உள்ளே போனான். அங்கிருந்த மண்வெட்டி ஒன்றனால் இரண்டு