பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இறுமாப்புள்ள இளவரசி



அடித்துத் தள்ளிவிடுவானே ! அவன் உடலே மலை போலிருக்கிறதே!” என்று சொன்னான்.

"நாதா, நீங்கள் நடுங்குவதைப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது ! நடுக்கமில்லாமல் நிலையாக நில்லுங்கள் ! அவனுடைய இடி, பூகம்பம் எல்லாம் இங்கே என்னிடம் பலிக்காது. அவன் இதுவரை எங்குமே கண்டிராத சாப்பாடெல்லாம் கொடுத்து அவனை அனுப்பாவிட்டால் நான் ஊனாக்கில்லை! அவனை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் மட்டும் நான் சொல்கிறபடி நடந்தாற்போதும் !" என்று ஊனாக் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.

இது போல் முன்பு எத்தனையோ ஆபத்தான சமயங்களில் அவள் அவனைக் காப்பாற்றியிருக்கிறாள். ஆகையால், அவன் அவளை முற்றிலும் நம்பினான். இப்பொழுது வந்துள்ள மாபெரும் ஆபத்தையும் கடப்பதற்கு, அவள் யுக்தி செய்து ஏதாவது தந்திரம் சொல்லுவாளென்று அவன் எண்ணியதில் வியப்பில்லை. எனவே, அவன் கவலை நீங்கி, சமைத்து வைத்திருந்த உணவை உண்டான்.

ஊனாக் ஒன்பது கம்பளி நூல்களை எடுத்து, மூன்று நூல்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரித்து வைத்தாள். ஒவ்வொரு பிரிவிலும் நூல்கள் மூன்று வர்ணங்களில் இருந்தன. ஒவ்வொரு பிரிவையும் நன்றாக முறுக்கி மூன்று கயிறுகள் தயாரித்து, ஒன்றைத் தன் வலக்கையின் மணிக்கட்டிலும், ஒன்றை வலக்கால் கணுக்கட்டிலும், ஒன்றை மார்பில் இதயத்தைச் சுற்றியும் கட்டிக்கொண்டாள். அவள் முக்கியமான எந்த வேலையைத் தொடங்கினாலும், இப்படிச் செய்து கொள்வது வழக்கம். இப்படிக் காப்புகள் கட்டிக் கொண்டால்தான் அவள் எடுத்த காரியம் வெற்றியடையும்!

பிறகு, அவள் வெளியே சென்று, அக்கம்பக்கத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து இருபத்தோர் இரும்புத் தோசைக் கற்களை இரவலாக வாங்கி வந்தாள். வீட்டிலே ரொட்டிக்கு வேண்டிய மாவைப் பிசைந்து, ஒவ்வொரு ரொட்டிக்குள்ளும் ஒரு தோசைக் கல்லை வைத்து, அப்படி