பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

இறுமாப்புள்ள இளவரசி


வெற்றி! உனக்கு நன்றி! காசு யார் கொடுத்தாலென்ன, இதோ, உன் நன்மைக்காக நான் குடிக்கிறேன்!” என்று கூறினான். உடனே, கிண்ணத்திலிருந்த மது அனைத்தையும், மூச்சுக்கூட விடாமல், அவன் உறிஞ்சிக் குடித்துவிட்டான்.

குள்ளன், "வெற்றி ! தானியேல், உனக்கு நல்வரவு! ஆனால், நீ மற்றவர்களை ஏமாற்றுவது போல் என்னிடம் வைத்துக்கொள்ளாதேǃ காசைக் கீழே வைத்துவிட வேண்டும் ! ஒரு கனவானைப் போல நீ முறையாக நடந்து கொள்வாயென்று நம்புகிறேன் !" என்று கூறினான்.

"நானா உனக்குப் பணம் கொடுக்க வேண்டும்? உன்னையே தூக்கி என் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு போய்விடுவேன், எச்சரிக்கை !” என்றான், தானியேல்

"தானியேல்ǃஏழு வருடமும் ஒருநாளும் நீ என் வேலைக்காரனாயிருந்தால், நீ தர வேண்டிய பணத்தைக் கழித்துக்கொள்வேன். ஆகையால், பேசாமல் என்னுடன் வா" என்று குள்ளன் கோபமாகப் பேசினான்.

இதைக் கேட்ட தானியேலுக்கு வருத்தம் அதிகமாயிற்று. ’இந்தக் குள்ளனிடம் நான் ஏன் கடுமையாகப் பேசினேன்ǃ' என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். எக்காரணத்தினாலோ குள்ளனுடன் செல்ல வேண்டியதுதான் என்று அவனுக்குத் தோன்றிற்று. அவனைத் தொடர்ந்து சென்றான். நடக்க நடக்க வழி தொலையவில்லை. இரவு முழுதும், மேடும் பள்ளமும், கோடும் குளமும், கரையும் கழனியுமாக அவர்கள் பல இடங்களைத் தாண்டிச் சென்றனர். இடையில் ஓய்வென்பதே இல்லை.

பொழுது புலரத் தொடங்கியதும், குள்ளன் பின்னால் திரும்பி, ”தானியேல், இப்பொழுது நீ வீட்டுக்குப் போகலாம். ஆனால், இன்றிரவு நீ கோட்டை மைதானத்தில் என்னை வந்து சந்திக்க வேண்டும். தவறினால் என்ன நடக்கு மென்பதை நாளடைவில் நீயே தெரிந்துகொள்வாய். ஆனால், நீ நல்ல முறையில் என்னிடம் பணி செய்து வந்தால், நான் உனக்குத் தாராளமாக உதவிகள் செய்வேன் ” என்று கூறினான்.