பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தான் சுமந்த பிணம்

57


கிழவன் குறும்புத்தனமாகச் சிரித்துக்கொண்டே, "நம்முடைய காத்தான் பிணம் தூக்குவானா? அவன் தூக்கவே மாட்டான் ! அவனைத் தூக்கவையுங்கள் " என்று கூறினான். உடனே குள்ளர்கள் அனைவரும் சிரித்து, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு, காத்தானை நெருங்கி வந்தனர். அவன் ஒட முயன்றான். ஆனால், அவர்கள் சுற்றி நின்று தடுத்தார்கள். அவன் ஒடும்போதே ஒரு குள்ளன், காலை நீட்டி அவன் கால்களைத் தட்டிவிட்டான். காத்தான் தரையிலே குப்புற விழுந்தான். உடனே சில குள்ளர்கள் அவனுடைய கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர், கால்களைப் பற்றி அமுக்கிக்கொண்டார்கள். அவனால் எழுந்திருக்க முடியவில்லை; உடலை அசைக்கவே முடியவில்லை. ஏழெட்டுக் குள்ளர்கள் சாலையிலே கிடந்த பிணத்தைத் தூக்கி அவன் முதுகிலே சார்த்தினார்கள். பிணத்தின் மார்பு அவனுடைய முதுகுடன் சேரவும், அதன் கைகள் இரண்டும் அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பின்னிக் கொள்ளவும் செய்துவிட்டு, அவர்கள் சற்றுப் பின்னால் நகர்ந்து நின்று, அவனை எழுந்திருக்கும்படி செய்தார்கள். அவன், வாயிலிருந்து நுரை கக்கிக்கொண்டே எழுந்திருந்தான். அவன் ஒரே மூச்சில் முதுகிலிருந்த பிணத்தை உலுக்கிக் கீழே தள்ளிவிட முயன்றான். ஆனால், பிணம் அவனை விடவில்லை. அதன் கைகள் அவன் கழுத்தை இறுகப் பிணித்திருந்தன. அதன் கால்கள் அவன் இடுப்பைச் சுற்றி அழுத்திக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அவன் ஆச்சரியமடைந்து பயந்து நடுங்கினான். அவன் எவ்வளவு பலமாக முயன்றும் அந்தச் சடலத்தை அசைக்க முடியவில்லை. அது அவன் முதுகுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. இனிமேல் தனக்குக் கதியில்லையென்றும், இத்துடன் தன் வாழ்வு முடிந்துவிடுமென்றும் அவன் அஞ்சினான். பிறகு, 'என்னுடைய தீய வாழ்க்கையே இந்த நல்ல தேவதைகளை என்னைப் பழி வாங்கும்படி செய்திருக்கிறது. ஆண்டவன்மீது சத்தியமாகச் சொல்கிறேன், மேரி அன்னை சத்தியமாகவும், 'பீட்டர், பவுல், பாட்ரிக், பிரிட்ஜெட் முதலிய ஞான முனிவர்கள் சத்தியமாகவும் சொல்கிறேன் - இனி நான் என் வாழ்நாள் முழுதும் நேர்மையாக வாழ்கிறேன். இந்த ஆபத்திலிருந்து நான் தப்பிவிட்டால்,